Published : 24 May 2016 03:04 PM
Last Updated : 24 May 2016 03:04 PM
ஆஸ்திரேலிய சேனல் ஒன்றின் பெண் நிருபரிடம் தகாத வார்த்தைகளைக் கூறியதற்காக கெய்ல் மீது கண்டனங்கள் குவிந்த நிலையில் அவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சேனல் 10 பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசியதற்காக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிறிஸ் கெயில் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சானல் 10 பெண் நிருபரான மெல் மெக்லாஃப்லின் கெயிலை அன்றைய தினம் பேட்டிக்காக அணுகிய போது, don't blush baby என்று கூறியது கிரிக்கெட் உலகில் கடும் சர்ச்சைக்குள்ளானது, கெயிலுக்கு அவர் ஆடிய கிளப் 10,000 டாலர்கள் அபராதம் விதித்தது.
அவரது புதிய புத்தகமான ‘சிக்ஸ் மெஷின்’ என்பதன் ஒரு சில பகுதிகள் வெளியாகியுள்ளது, அதில் ஆண்ட்ரூ பிளிண்டாப், கிறிஸ் ரோஜர்ஸ், வர்ணையாளர் இயன் சாப்பல் ஆகியோர் தன் மீது வைத்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.
அந்தப் புத்தகத்தில் கெயில் தனது நடத்தை தொடர்பாக கூறியிருப்பதாவது:
டி20 என்பது வித்தியாசமானது, இது டெஸ்ட் கிரிக்கெட். டி20 ஒரு மிகப்பெரிய கேளிக்கை. இதில் வித்தியாசமாக பலவற்றைச் செய்வோம். அன்று மெல் என்னிடம் கேள்வி கேட்ட போது நான் டி20 மனநிலையில் இருந்தேன். நான் ஒரு நகைச்சுவைக்காகத்தான் அவ்வாறு கூறினேன். ஆனால் மரியாதைக்குறைவாக நான் அதனைப் பயன்படுத்தவில்லை. அதை சீரியசாக எடுத்துக் கொள்வதற்காக நான் கூறவில்லை.
இந்த சம்பவத்தில் சேனல் 10 வர்ணனையாளர்கள் சிரித்ததை என்னால் கேட்க முடிந்தது. ஆனால் இதில் ஒரேயொருவர் மட்டும் விளையாட்டை சீரியசாக ஊதிப்பெருக்கி விட்டார். இதை ஏதோ ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாக்கி விட்டார்.
நீங்கள் நான் என்னவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படி நான் இல்லை என்பதற்காக என்னை வெறுக்காதீர்கள். நான் நீங்களாக இல்லை என்பதற்காக என்னை வெறுக்க வேண்டாம். நான் நானாக இருக்கிறேன், நான் நேர்மையானவன், என்றார்.
கெயில் மீது அப்போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ரோஜர்ஸ் விமர்சனம் வைத்த போது, “கெயில் ஒரு மோசமான உதாரணத்தை ஏற்படுத்திவிட்டார். இதே போன்ற நடத்தையை அவரிடம் திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது” என்றார்.
ரோஜர்ஸ் விமர்சனத்துக்கு தனது இந்த நூலில் பதில் அளித்த கெயில், “ராஜர்ஸ் நீங்களும் நானும் நிறைய நேரங்களில் பாரில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியிருக்கிறோம், நீங்கள் எப்படி அவ்வாறு கூறலாம்? அடுத்த முறை நீங்கள் என்னைப்பற்றி வாயைத் திறப்பதற்குப் பதிலாக காரட்டை மெல்லுங்கள்” என்று எழுதியுள்ளார்.
அதே போல் தன்னை விமர்சித்த ஆண்ட்ரூ பிளிண்டாப் பற்றி கூறும்போது, “சிறு வயதிலேயே வயாக்ரா எடுத்துக் கொள்ளும் நீங்கள் எனக்கு உபதேசம் செய்யக்கூடாது” என்று எழுதியுள்ளார்.
அதே போல் கெய்லை கிரிக்கெட்டிலிருந்து உலகம் முழுதும் தடை செய்ய வேண்டும் என்று கூறிய இயன் சாப்பலுக்கு தன் பதிலில், “என்னை உலகம் முழுதும் தடை செய்ய இயன் சாப்பல் அழைப்பு விடுக்கிறார். மேற்கிந்திய தீவுகளில் ஒருமுறை கிரிக்கெட் அதிகாரி ஒருவரை கை நீட்டி அடித்தற்காக குற்றம்சாட்டப்பட்டவர் இயன் சாப்பல். இவர் எப்படி என்னை தடை செய்ய கோர முடியும்?” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT