Published : 01 Jul 2022 04:06 PM
Last Updated : 01 Jul 2022 04:06 PM
இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் அவர் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணி கடந்த ஆண்டு கோலி தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. அதில் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் கடைசி போட்டி கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, அந்தத் தொடரில் ஒத்திவைக்கப்பட்ட அந்தக் கடைசி போட்டி தான் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. அதனால், இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றியோ அல்லது சமனில் நிறைவு செய்தால் கூட தொடரை வென்று அசத்தும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என களம் கண்டுள்ளது இந்தியா. இருந்தும் சீனியர் வீரர் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 4 டெஸ்ட் மற்றும் தற்போது நடைபெற்று வரும் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆடும் லெவனில் அவர் இடம்பெறாதது குறித்து கடந்த முறை பெரிய விவாதம் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர்களுக்கான ஐசிசியின் தரவரிசையில் அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எட்ஜ்பாஸ்டனில் அஸ்வின்: இங்கிலாந்து மண்ணில் அஸ்வின் மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 200.1 ஓவர்கள் வீசி 18 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 14 இன்னிங்ஸில் பேட் செய்து 261 ரன்கள் எடுத்துள்ளார். இதில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடி உள்ளார். அந்த போட்டியில் 47 ஓவர்கள் வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்த மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற அஸ்வின் 32 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரே ஒரு டி20 போட்டியிலும் அவர் விளையாடி உள்ளார். ஆனால் அதில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
இது தவிர இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டிலும் மூன்று அணிகளுக்காக அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 10 போட்டிகளில் விளையாடி 553 ரன்கள் மற்றும் 61 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இதில் ஏழு முறை 5 விக்கெட்டுகளுக்கும் கூடுதலாக கைப்பற்றியுள்ளார்.
மிகப்பெரிய தவறு? - அஸ்வினை ஏன் ஆடும் லெவனில் விளையாட வைக்கவில்லை என ட்விட்டரில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு கோலி - ரவி சாஸ்திரியால் தான் அஸ்வின் இங்கிலாந்து தொடரில் ஒரே ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என சொல்லி இருந்தனர் சிலர். இப்போது அவர்கள் இருவரும் பொறுப்பில் இல்லை. ஆனாலும் அஸ்வின் விளையாடவில்லை. அவரை விளையாட வைக்காதது மிகப்பெரிய தவறு என ட்விட்டர் தளத்தில் ரியாக்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் நோக்கில் இரண்டு ஸ்பின் ஆப்ஷன் வேண்டாம் என அஸ்வினை டிராப் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
காலம் மாறினாலும், கேப்டன் மாறினாலும் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு மட்டும் அஸ்வினுக்கு ஏனோ கிடைக்கப்பெறாமல் உள்ளது.
Big mistake.. @BCCI for not taking @ashwinravi99 for the #ENGvIND test..
— dr. dhruv (@dhruvjyoti0311) July 1, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT