

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக தலைமை தங்குவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி நாளை எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது.
கேப்டன் ரோகித் சர்மா கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ள சூழலில், அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இந்திய அணியை பும்ரா தலைமை தாங்கி வழிநடத்துகிறார். முன்னதாக, இந்தத் தகவல் பரவிய நிலையில் பிசிசிஐ இப்போது அதை உறுதி செய்துள்ளது.
இந்திய அணி விவரம்: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, புஜாரா, ரிஷப் பந்த் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா, மயங்க் அகர்வால்.
இந்த வீரர்களில் நாளைய போட்டியில் ஆடும் லெவனில் இடம் பெறப்போகும் வீரர்கள் யார், யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இந்திய அணி கடந்த ஆண்டு கோலி தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. அதில் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் கடைசி போட்டி கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போது அந்தத் தொடரில் ஒத்திவைக்கப்பட்ட அந்தக் கடைசி போட்டிதான் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. அதனால், இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி அல்லது சமனில் நிறைவு செய்தால் கூட தொடரை வென்று அசத்தும்.