Published : 29 Jun 2022 09:43 PM
Last Updated : 29 Jun 2022 09:43 PM
எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்த உள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. ரோகித் சர்மாவுக்கு கரோனா தொற்று காரணமாக அவர் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் பிரதான வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி முதலாவதாக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த போட்டி தொடங்குகிறது.
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ள காரணத்தால் அவர் இந்த போட்டியில் விளையாடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதனால் அவர் இல்லாத காரணத்தால் இந்திய அணியை பும்ரா வழிநடத்துவார் என தெரிகிறது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அது நடந்தால் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் வழிநடத்தியவர் என அறியப்படுவார். கடந்த 1987-இல் கபில்தேவ் அணியை வழிநடத்தி இருந்தார். இப்போது பும்ரா அவரது வழியை பின்பற்றி வந்த வேகப்பந்து வீச்சு கேப்டனாக இருப்பார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் இன்று (புதன்கிழமை) வலைப்பயிற்சியில் முதல்முறையாக ஈடுபட்டனர். அதனை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கவனித்துள்ளார்.
மறுபக்கம் ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடாத பட்சத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் உடன் களம் இறங்க போகும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய அணி கடந்த ஆண்டு கோலி தலைமையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. அதில் 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில் கடைசி போட்டி கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போது அந்த தொடரில் ஒத்திவைக்கப்பட்ட அந்த கடைசி போட்டி தான் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. அதனால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி அல்லது சமனில் நிறைவு செய்தால் கூட தொடரை வென்று அசத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT