Last Updated : 07 May, 2016 02:41 PM

 

Published : 07 May 2016 02:41 PM
Last Updated : 07 May 2016 02:41 PM

இந்திய அணியில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்களா?

நடப்பு ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல், அக்சர் படேல், மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நன்றாக ஆடி வருகின்றனர். இந்நிலையில் இளம் வீரர்களுக்கும் அனுபவ வீரர்களுக்கும் மீண்டும் வாய்ப்பளித்து வரும் இந்திய அணித்தேர்வுக்குழு இவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக கம்பீர் இருக்கும் ஃபார்ம் அவரை முரளி விஜய்யுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட தொடக்க வீரராக மீண்டும் களமிறக்கலாம் என்ற அளவுக்கு கம்பீர் ரசிகர்கள் நினைக்கின்றனர். அதுவும் ஷிகர் தவண் ஒரு போட்டியில் அடித்தால் பிறகு 5-6 போட்டிகளில் தொல்வியடைகிறார், மேலும் சமீபத்தில் அவர் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் ஆடிவிடவில்லை, இதனால் அவரை நீக்கி கம்பீரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆனால் இது ஷிகர் தவணின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளதால்தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் நின்று நிதானித்து பொறுப்புடன் ஆடத் தொடங்கியுள்ளார். இவர் இவ்வாறு ஆடுவது தனக்காகவா அல்லது கம்பீர் உள்ளே நுழைந்து விடுவாரே என்ற அச்சத்தினாலா என்று தெரியவில்லை. ஆனால் ஆரோக்கியமான ஒரு போட்டி அணிக்கு வலு சேர்ப்பதுதானே.

இந்திய அணி சொந்த மண்ணிலேயே நிறைய போட்டிகளில் ஆடவிருப்பதால் கம்பீர் அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது பலரது விருப்பம். கம்பீரின் அயல்நாட்டு பிட்ச்களுக்கான உத்தி கேள்விக்குரியது என்றாலும் அவரது மன உறுதியினால் சில நல்ல இன்னிங்ஸையும் ஆடியிருக்கிறார், ஆனால் 2011 ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை இழந்ததில் கம்பீரையும் சேர்த்து இழக்க வேண்டியதானது.

விஸ்டன் இந்தியா அல்மனாக் ஆசிரியர் சுரேஷ் மேனனை இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) தொடர்பு கொண்ட போது, “கம்பீர் சமீபகாலங்களில் ரன்களை சிறந்த முறையில் எடுத்து வந்தாலும் தேர்வுக்குழுவினர் அவரிடம் மீண்டும் செல்ல வாய்ப்பில்லை. மேலும் இந்தியாவில் வரும் தொடர்கள் அமையவிருப்பதால் இளம் வீரருக்கோ, ஷிகர் தவணுக்கோ மீண்டும் வாய்ப்பளிக்கவே விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) விளையாட்டுப் பிரிவு சிறப்பு செய்தியாளர் ஒருவர் கூறும் போது, “நிறைய டெஸ்ட் போட்டிகள் வரவிருப்பதால் சீராக தொடக்கம் கொடுக்கும் தொடக்க வீரர் தேவை. தவண் ஃபார்ம் நம்ப முடியவில்லை. கம்பீர் திரும்பி அழைக்கப்பட வேண்டும். கம்பீர் நல்ல பார்மில் இருப்பதோடுஒரு இன்னிங்சை கட்டமைக்கும் திறனும் சாதுரியமும் படைத்தவர்” என்றார்.

கம்பீர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடர்களில் தோல்வியடைந்திருந்தாலும் அதற்கு முன்னதாக 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சச்சின், சேவாக் ஆட்டமிழந்த போது இலங்கை அவர்களுக்குத்தான் வெற்றி என்று நினைத்த போது கம்பீர் 122 பந்துகளில் 97 ரன்களை ஈட்டி இலங்கை அணியின் நம்பிக்கையை உடைத்ததை மறக்க முடியாது. அந்தப் போட்டியில் தோனி ஆட்ட நாயகன் விருது பெற்றாலும் கம்பீர் கட்டமைத்த இன்னிங்ஸ்தான் திருப்பு முனை என்றே கூறலாம்.

தினேஷ் கார்த்திக்:

சுறுசுறுப்பான விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் தினேஷ் கார்த்திக், ஆஸி.க்கு எதிராக 2004ல் முதல் டெஸ்ட்டில் ஆடினார், இதே ஆண்டில் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், 2006-ல் டி20-யில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் முதல் போட்டியை ஆடியவர்.

தோனி வருவதற்கு முன்பாக 23 டெஸ்ட் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் 1,000 ரன்களை 27.27 என்ற சராசரியின் கீழ் எடுத்திருந்தார். அதிகபட்ச ஸ்கோர் 129 ரன்கள். கடைசியாக 2010-ல் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார். இவரும் வாசிம் ஜாஃபரும் சேர்ந்து இங்கிலாந்தில் தொடக்க வீரர்களாக 50 ரன்களுக்கும் சற்றே கூடுதலாக சராசரி வைத்திருந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் தற்போது நன்றாக ஆடி வருகிறார், இவரது பிரச்சினை ஷிகர் தவண் போன்றதுதான், அதாவது சீரான முறையில் ரன்களை எடுக்க மாட்டார். ஒருவேளை அவர் இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து நன்றாக ஆடினால் ஒருவேளை இந்திய அணிக்கு மீண்டும் பரிசீலிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ராபின் உத்தப்பா:

இவர் இந்திய அணியில் இடம்பெறாமல் இருப்பது மிகப்பெரிய புதிர்தான். தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டிலும் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டிலும் பிரமாதமாக ஆடி வருகிறார், அபாயகரமான தொடக்க வீரர், சேவாகிற்கு இவரை ஒரு மாற்று வீரராகக் கருத இடமுண்டு, விக்கெட் கீப்பிங் திறமைகளும் உள்ளன. 2007 உலக டி20 கோப்பையில் இவரது இன்னிங்ஸ்கள் சில மறக்க முடியாதவை. ஒருநாள் போட்டிகளிலும் ஆரம்பக்கட்டங்களில் நடுவரிசையில் கடைசியில் இறங்கி சில அபாரமான இன்னிங்ஸ்களை ஆடியுள்ளனர். இவரது திறமைக்கு 46 ஒருநாள் போட்டிகளில் 25.34 என்ற சராசரியில் 934 ரன்களை எடுத்துள்ளது குறைவே. அதிகபட்ச ஸ்கோர் 86. 13 டி20 போட்டிகளில் 249 ரன்கள். 50 ரன்கள் அதிகபட்ச ஸ்கோர். சராசரி 24.90.

உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது சொந்த பயிற்சியாளராக பிரவீன் ஆம்ரேயை அமர்த்திக் கொண்டு தீராத தனது கிரிக்கெட் ஆர்வத்தினால் தொடர்ந்து போராடி வருகிறார், இவருக்கு மீண்டும் தொடர்ச்சியாக வாய்ப்பளிக்காமல் இருப்பது ஒரு புரியாத புதிர்.

அதே போல் பார்த்திவ் படேல் இன்னொரு விரயம் செய்யப்பட்ட திறமை. கங்குலியால் உருவாக்கப்பட்ட போராட்ட குணம் கொண்ட வீரர். கில்கிறிஸ்ட் போல் கீப்பிங் செய்து அவரைப்போல் அதிரடியாக ஆட வேண்டும் என்ற விருப்பத்துடன் 2002-ல் தனது 17-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தவர். இப்போது கூட விருத்திமான் சஹாவுக்குப் பதிலாக பார்த்திவ் படேல்தான் டெஸ்ட் போட்டிகளுக்கு சரியான தெரிவாக இருக்க முடியும்.

இவரிடம் ஷாட்களின் ரேஞ்ச் அதிகம். ரெய்னா போல் பவுலர் தன் காலுக்குக் கீழேயே பந்தை பிட்ச் செய்து எழுப்பினாலும் அவுட் ஆகக்கூடியவர் அல்ல, திறமையான ஹூக், புல் ஷாட்களை ஆடுபவர். முதலில் சுயநல வீரர் அல்ல. இவரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் நன்றாக ஆடி வருகிறார், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடி வருகிறார். 31 வயதாகும் இவரிடம் இன்னும் 3-4 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் மீதமுள்ளது. விரயம் செய்யாமல் பயன்படுத்துமா இந்திய அணி நிர்வாகம்.

அக்சர் படேல், இவரும் ஒரு அயராத போராளி. தொடர்ந்து திறமையை நிரூபித்து வருபவர், ஜடேஜாவுக்கு கொடுக்கப்படும் அளவுக்கதிகமான வாய்ப்புகளினால் பாதிக்கப்பட்டவர். சுனில் கவாஸ்கர் போன்றோர் கடும் விமர்சனம் செய்த போதும் கூட கடுமையாக உழைத்து நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தார். எனவே ஒருநாள், மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஜடேஜாவுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x