Published : 27 Jun 2022 08:52 PM
Last Updated : 27 Jun 2022 08:52 PM

டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மாவை விடுவித்து விடலாம்: காரணம் சொல்லும் சேவாக்

புதுடெல்லி: இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை விடுவித்து விடலாம் என கருத்து தெரிவித்துள்ளார், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்.

கடந்த 2021 இறுதியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி தனது பொறுப்பை துறந்த பிறகு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டுக்கும் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோகித் சர்மா. ஆனால் அது முதலே ஓய்வு, காயம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சர்வதேச தொடர்களில் இருந்து விலகி இருந்தார் ரோகித். இப்போது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வகையில் முகாமிட்டிருந்த அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில், இந்தக் கருத்தை சேவாக் சொல்லியிருக்கிறார்.

“இந்திய அணி நிர்வாகம் வேறு ஒரு வீரரை டி20 கேப்டன் பொறுப்பில் நியமிக்க முடிவு செய்யும் எண்ணத்தில் இருந்தால் ரோகித் சர்மாவை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து விடலாம் என நான் கருதுகிறேன். ஏனெனில், இது ரோகித் சர்மாவுக்கு வேலை பளுவை திறம்பட நிர்வகிக்க உதவும். மேலும், மன அளவிலும் அவரது சோர்வை இது நீக்கும். இதனை அவரது வயதை கருத்தில் கொண்டு நான் சொல்கிறேன்.

வேறு ஒரு வீரர் டி20 ஃபார்மெட்டில் கேப்டனாக நியமிக்கப்பட்டால் அது ரோகித்துக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அணியை புத்துணர்வுடன் வழிநடத்த உதவும் என நான் கருதுகிறேன். அதே நேரத்தில் அணி நிர்வாகம் அனைத்து ஃபார்மெட்டுக்கும் ஒரே கேப்டன் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அதற்கு ரோகித் மட்டுமே சரியான நபர்” என தெரிவித்துள்ளார் சேவாக்.

வெவ்வேறு கிரிக்கெட் ஃபார்மெட்டுக்கு வேறு வேறு கேப்டனை நியமிக்கும் பாணியை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் கடைப்பிடித்து வருகின்றன. அதன் மூலம் அந்த அணி வெற்றியும் பெற்று வருகின்றன. அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் சூழலை பொறுத்தவரையில் அனைத்து ஃபார்மெட்டுக்கும் ஒரே கேப்டன் மட்டுமே இருக்க வேண்டும் என வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் முன்னாள் கேப்டன் கபில்தேவ். கடந்த ஆண்டு கோலி டி20 ஃபார்மெட்டுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமே விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x