Published : 24 Jun 2022 04:39 PM
Last Updated : 24 Jun 2022 04:39 PM
டிஎன்பிஎல் தொடரில் மன்கட் முறையில் எதிரணியினர் வசம் தனது விக்கெட்டை இழந்தார் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர் நாராயண் ஜெகதீசன். விக்கெட்டை இழந்த விரக்தியில் ஆபாசமான சைகையை காட்டி இருந்தார் அவர். இப்போது தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடப்பு டிஎன்பிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது சேப்பாக்.
அந்த அணிக்காக கேப்டன் கவுசிக் காந்தி மற்றும் நாராயண் ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நான்காவது ஓவரை நெல்லை அணியின் கேப்டன் பாபா அபராஜித் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை வீசுவதற்கு முன்னரே நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஜெகதீசன், கிரீஸை விட்டு வெளியே நகர்ந்திருந்தார். அதை கவனித்த அபராஜித், மன்கட் முறையில் அவரை ரன் அவுட் செய்தார். பின்னர் பெவிலியனுக்கு விரக்தியுடன் திரும்பிய அவர் பந்து வீசிய அணியை நோக்கி ஆபாசமாக சைகை காட்டியிருந்தார்.
ஜென்டில்மேன்களின் ஆட்டம் என போற்றப்படும் கிரிக்கெட் விளையாட்டில் இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் ஜெகதீசன். இதனை சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
"நேற்றைய போட்டியில் மிகவும் மோசமாக நடந்து கொண்டமைக்காக அனைவரிடமும் நான் எனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் விளையாட்டுக்காக வாழ்ந்து வருபவன் நான். இந்த விளையாட்டின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை நான் மதிக்கிறேன். அதனால் தான் நான் அப்படி நடந்து கொண்டதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
விளையாட்டில் பேரார்வம் என்பது மிகவும் முக்கியம். ஆனால் அதைக் கட்டுப்படுத்தவும், சரியான வழியில் முன்னெடுத்து செல்வதும் ரொம்பவே அவசியம். அதில் நான் தோல்வியைத் தழுவி உள்ளேன். நான் செய்த செயலுக்கு மன்னிப்பே கிடையாது. வருத்தத்துடன் ஜெகதீசன்" என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜெகதீசன்? - 26 வயதான ஜெகதீசன், கோவையை சேர்ந்தவர். கடந்த 2016 முதல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார். 2018 முதல் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகித்து வருகிறார் அவர். டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார்.
என்ன சொல்கிறது விதி? சர்ச்சைக்குரிய 'மன்கட் அவுட்' இனி அதிகாரபூர்வமாக ரன் அவுட்டாக கருதப்படும் என கடந்த மார்ச் மாதம் மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) தெரிவித்தது. நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன் பவுலர்கள் பந்துவீசும்போது கிரீஸை விட்டு வெளியே செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் 'மன்கட் அவுட்' செய்யலாம். இந்த விதி ஏற்கெனவே கிரிக்கெட்டில் இருந்தாலும், இது சரியான நடைமுறையாக இருக்காது என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலர் இந்த முறையில் அவுட் செய்யாமல் இருந்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இந்த முறையில் பட்லரை அவுட் செய்த போது அது சர்ச்சையானது. இதையடுத்து, இப்போது 'மன்கட்' முறையை அதிகாரபூர்வ ரன் அவுட் ஆக அங்கீகரித்துள்ளது எம்சிசி. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
இன்னும் என்னென்ன interesting moments காத்துட்டு இருக்கோ!
Watch Shriram Capital TNPL on Star Sports 1 & Star Sports 1 HD.
Also, streaming live for free, only on @justvoot ! Download the app now! #NammaOoruNammaGethu#TNPL2022#TNPLonVoot#TNPLonStarSportsTamil#CSGvsNRK pic.twitter.com/crPvHmr9dM
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT