Published : 22 Jun 2022 06:32 PM
Last Updated : 22 Jun 2022 06:32 PM
கொல்கத்தா: இந்திய ஆடவர் கால்பந்து அணிக்கு ஊக்கம் கொடுக்க ஜோதிடருக்கு 16 லட்ச ரூபாய் கொடுத்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு பணி அமர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஆடவர் கால்பந்து அணி அண்மையில் நடைபெற்ற ஆசிய கால்பந்து கோப்பைக்கான தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மூன்றாவது தகுதி சுற்றின் மூலம் உறுதி செய்தது.
இந்த நிலையில், இந்த வெற்றிக்கு பின்னால் ஜோதிட சாஸ்திரம் விளையாடியதா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
மொத்தத்தில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அணியின் நட்சத்திர லைன்-அப்பை சீரமைக்க ஜோதிடத்தின் துணையை நாடியுள்ளதாக தெரிகிறது.
சுனில் சேத்ரி தலைமையிலான அணி அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உள்ள ஆசிய கோப்பையில் பங்கேற்கிறது.
"நான் இதை வெளிப்படையாக சொல்கிறேன். அணிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ரூ.16 லட்சம் செலவில் ஜோதிடர் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆசிய கோப்பையை முன்னிட்டு அணிக்கு உத்வேகம் கொடுக்கும் மோட்டிவேட்டர் ஒருவர் நியமிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் தான் அது ஒரு ஜோதிட நிறுவனம் என்பது எனக்கு தெரியவந்தது" என பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இந்திய அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரிய அளவில் கேலிக்கு ஆளாகியுள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு சம்பந்தப்பட்ட ஜோதிட நிறுவனம் மூன்று செஷன்களை எடுத்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கோல்கீப்பர் தனுமோய் போஸ் கூட்டமைப்பின் இந்த யோசனையை பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.
இந்திய கால்பந்து களத்தில் இது மாதிரியான போக்குகள் புதிதல்ல என சொல்லப்படுகிறது. முன்னதாக, டெல்லியை சார்ந்த கிளப் அளவிலான கால்பந்து அணி ஒன்று முக்கிய லீக் போட்டியில் வெற்றி பெற வேண்டி பாபா ஒருவரை நியமித்தது. வெற்றிக்கு பிறகு அதற்கான காரணமாக அவரது பெயரை தெரிவித்தது அந்த அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT