Published : 22 Jun 2022 03:32 PM
Last Updated : 22 Jun 2022 03:32 PM
தோஹா: கத்தார் நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டிகளை காண வரும் கால்பந்து ரசிகர்கள் ‘பார்ட்டி’ போன்ற கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட அந்நாடு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிகிறது.
வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரையில் கத்தார் நாட்டில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. தொடரை நடத்த கத்தார் தேசம் தயார் நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் பல்வேறு குற்றச்சாட்டுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளாகி உள்ளது அந்த நாடு. கட்டுமான தொழிலாளர்களை அந்த நாடு நடத்திய விதம் உலக அளவில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது. உலகில் கடுமையான விதிகளை பின்பற்றி வரும் நாடுகளில் கத்தாரும் ஒன்று.
இந்நிலையில், உலகக் கோப்பை போட்டிகளை நேரில் காண விரும்பும் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும் எனத் தெரிகிறது. அந்த விதிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு இம்சை கொடுக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
அந்த நாட்டில் திருமண உறவை கடந்து பிற நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. அதனைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்களும் கத்தார் நாட்டில் நடைமுறையில் உள்ளது. கத்தாரில் வசிக்கும் மக்கள் இந்தச் சட்டதிட்டங்களை பின்பற்றி வருகின்றனர். தற்போது உலகக் கோப்பை தொடருக்காக கத்தார் செல்லும் மக்கள் அந்த விதிகளை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகி உள்ளது.
அந்த நாட்டின் சட்டத்தின்படி திருமண பந்தத்திற்கு மீறி பாலியல் உறவு கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் ஓராண்டு தண்டனை விதிக்கப்படுமாம். ஆனாலும் சமயங்களில் அந்த தண்டனை ஏழு ஆண்டுகள் வரை கூட இருக்கும் என தன்னார்வ அமைப்பு ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக போட்டிகள் முடிந்ததும் மது விருந்து, பார்ட்டி கொண்டாட்டம் போன்ற கேளிக்கை கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட கூடாது என தெரிவிக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடர் நடைபெறும் காலத்தில் இந்த சட்டத்திட்டங்களை அந்த நாட்டின் காவல்துறை தீவிரமாக பின்பற்றும் எனத் தெரிகிறது.
மேலும், திருமண உறவில் உள்ள தம்பதியரை தவிர பிற நபர்கள் பாலியல் உறவு கொள்ளக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இந்த சட்ட விதிகளை மீறும் ரசிகர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் தன்பாலீர்ப்புக்கு எதிராகவும் கடுமையான தண்டனை அடங்கிய சட்டமும் நடைமுறையில் உள்ளது. சுமார் 27 நாட்கள் கத்தாரில் நடைபெறும் இந்தத் தொடரில் ரசிகர்கள் இந்த விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனத் தெரிகிறது. ரொனால்டோ, மெஸ்ஸி, லெவன்டோஸ்கி, ஸ்வாரஸ் போன்ற வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT