Published : 03 Jun 2014 08:30 AM
Last Updated : 03 Jun 2014 08:30 AM
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநில அரசும், அம்மாநில கிரிக்கெட் சங்கமும் இணைந்து இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
2012 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றபோது அந்த அணிக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா ஈடன் கார்டனில் நடத்தப்பட்டது. அதேபோன்றதொரு பிரம்மாண்ட வெற்றிக் கொண்டாட்டம் ஈடன் கார்டனில் மீண்டும் நடைபெறவிருக்கிறது.
இது தொடர்பாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க செயலர் சுபிர் கங்குலி கூறுகையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ‘ஹோம் கிரவுன்டான’ ஈடன் கார்டனில் நடைபெறும் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ரசிகர்களும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம் ஆகும். ஈடன் கார்டன் மைதானம் காலை 11.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை திறந்திருக்கும். இந்த நிகழ்ச்சியை மறக்க முடியாத வகையில் மிகச்சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணிக்காக சதமடித்த விருத்திமான் சாஹாவும் மேங்கு வங்க வீரர் என்பதால் அவரையும் இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறோம்” என்றார்.
மம்தா பங்கேற்கிறார்
ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள். அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடினார்கள். இதேபோல் பஞ்சாப் அணிக்காக விளையாடி சதமடித்த மேற்கு வங்க வீரரான விருத்திமான் சாஹாவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொல்கத்தா அணி சாம்பியன் ஆனதுமே அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பாக அந்த அணியின் உரிமையாளர் ஷாரூக் கானிடம் பேசினேன். இதேபோல் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியாவிடமும் இதுகுறித்து பேசியிருக்கிறேன். அடுத்த சில நாள்கள் தொடர்ச்சியாக எனக்கு பல்வேறு பணிகள் உள்ளன. எனினும் பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக வடக்கு பெங்காலில் இருந்து ஈடன் கார்டன் வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா அணி 2012-ல்முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றபோது நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, கொல்கத்தா அணியினருக்கு தங்க சங்கிலியையும், தங்க பதக்கத்தையும் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இளைய மகனுக்கு சமர்ப்பணம்
ஐபிஎல் வெற்றியை தனது இளைய மகன் ஆப்ராமுக்கு சமர்ப்பிப்பதாக கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்த வெற்றியை எனது இளைய மகனுக்கும், கடுமையாக உழைத்த எங்கள் அணியின் கேப்டன் கம்பீர் மற்றும் வீரர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். எங்கள் அணியில் பெரிய வீரர்களோ, அதிரடி ஆட்டக்காரர்களோ இல்லை. ஆனால் எங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது. மணீஷ் பாண்டே சிறப்பாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றுவார் என எனது மகனிடம் தெரிவித்தேன். அதேபோன்று அவர் செய்துவிட்டார்” என ஷாரூக் கான் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT