Published : 11 May 2016 12:57 PM
Last Updated : 11 May 2016 12:57 PM
விசாகப்பட்டிணத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 138 ரன்கள் வெற்றி இலக்கை எடுக்க முடியாமல் தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 133/8 என்று முடிந்தது.
புனே அணியின் ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் அணியை 137 ரன்களுக்கு மட்டுப்படுத்தினார். ஆனால் இந்த தொடரின் சிறந்த வேகப்பந்து கூட்டணியைக் கொண்ட சன் ரைசர்ஸ் அணி தோனியின் அரைகுறை முயற்சியையும் முறியடித்து வெற்றி கண்டது.
பிட்சில் ஸ்விங், ஸ்பின் இரண்டுமே எடுபட்டது. அஸ்வினுக்கு 4 ஓவர்களை கொடுத்து முடித்தார் தோனி அவர் 16 ரன்களை விட்டுக் கொடுத்து ஷிகர் தவண் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இலக்கைத் துரத்தும்போது ரஹானே (0), கவாஜா (11) விரைவில் வெளியேற, தோனி தான் இறங்காமல் பெய்லி மற்றும் அஸ்வினை முன்னால் பேட் செய்ய அனுப்பினார்.
இருவரும் இணைந்து 8 ஓவர்களில் 48 ரன்கள் சேர்த்தனர். பெய்லி 40 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஹென்ரிக்ஸ் பந்தில் நெஹ்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3 பவுண்டரிகளுடன் 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த அஸ்வின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பாரிந்தர் ஸரண் பந்தில் நமன் ஓஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சவுரவ் திவாரியால் நல்ல பிட்சில் ஆட முடியவில்லை. 9 ரன்களில் நெஹ்ராவிடம் வெளியேறினார். 15 ஓவர்களில் 86/5.
40 பந்துகளில் 60 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் தோனி இறங்கினார். சன் ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளும் அளவுக்கு புனே பேட்டிங் இல்லை. தோனியின் ரிப்ளெக்ஸ் காணாமல் போய் விட்டது. சாதாரணமாக பின்னால் சென்று கட் செய்தால் 4 ரன்கள் வரும் பந்தை அவர் தப்பும் தவறுமாக முன்னால் வந்து ஆடி சிங்கிள் எடுக்கவே முயற்சி செய்தார். தான் நினைத்தால் பவுண்டரி, சிக்சர் அடிக்க முடியும் என்ற தோனியின் பழைய ரிப்ளெக்ஸ் அவரது நினைவெனும் கிடங்குக்குள் சென்று விட்டது. களத்தில் பவுலர்கள் அவரை படுத்தி எடுக்கின்றனார்.
தோனியும் திசர பெரேராவும் ஒன்று, இரண்டு என்றே எடுக்க முடிந்தது, முஸ்தபிசுர் ரஹ்மானின் கட்டர்களை அடிக்க முடியவில்லை சரி, அவரது புல்டாஸ்களையும் தட்டி விட்டு உயிரை வெறுத்து 2 ரன்களுக்கு ஓடுவது ஏன் என்பது மட்டும் புரியவில்லை. இடையில் ஸ்ரண் 16-வது ஓவரில் ஒரு லெந்த் பந்தை வீச லாங் ஆஃபில் சிக்ஸ் அடித்தார். 17-வது ஓவரை முஸ்தபிசுர் வீச 5 ரன்களே வந்தது.
இந்நிலையில் முதல் 3 ஓவர்களில் 5 ரன்களையே விட்டுக் கொடுத்த புவனேஷ் குமார் 18-வது ஓவரை வீச வந்தார். திசர பெரேரா ஒரு சிக்ஸ் தோனி ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள் எடுக்கப்பட்டது. பவுண்டரி அடித்த பந்து ஒரு அரைக்குழி பந்து. அதையும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தள்ளி புல்டாஸாக வீசியிருந்தால் தோனியினால் அதனை ரீச் செய்திருக்க முடியாது. 19-வது ஓவரில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரில் இரண்டு 2 ரன்களை தோனி ஓடி எடுக்க அந்த ஓவரில் 8 ரன்கள் வந்தது.
ஒருவழியாக கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாதக நிலை ஏற்பட்டது, பெரேரா, தோனி கிரீசில் இருக்கின்றனர். பழைய தோனியாக இருந்தால் இது 3 பந்துகளில் முடிந்திருக்கும். இப்போதுதான் அவருக்கு உத்தியும் இல்லை, மனவிருப்புறுதியும் இல்லை, கடமைக்காக ஆடுபவர் போல் ஆகிவிட்டார்.
இந்த மனநிலையில் நெஹ்ராவை அடித்து வெற்றி பெறுவது என்பது கடினம், கடைசி ஓவரை நெஹ்ரா வீசினார். முதல் 3 பந்துகளில் பவுண்டரி எடுக்க முடியவில்லை. 3-வது பந்தில் பெரேரா சுழற்றி கேட்ச் கொடுத்தார். 3 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் நெஹ்ராவின் யார்க்கர் நல்ல வாகான புல்டாஸாக மாற தோனி அதனை லாங் ஆனில் முறைப்படி சிக்ஸுக்கு அனுப்பி வைத்தார்.
தேர்ட் மேன் முன்னால் கொண்டு வரப்பட ஸ்கொயர் லெக் பின்னால் சென்றது. 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை. நெஹ்ரா ஒரு நல்ல பவுன்சரை வீச தோனியின் புல் ஷாட் டாப் எட்ஜ் ஆக முன்னால் கொண்டு வரப்பட்ட ஷார்ட் தேர்ட்மேன் வீரர் ஸ்ரண் பந்தை எடுத்து அடிக்க இல்லாத 2 வது ரன்னுக்காக வேறு வழியில்லாமல் வந்த தோனி யுவராஜ் சிங்கினால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதாவது ஷார்ட் தேர்ட் மேனை முன்னால் கொண்டு வந்து ஒரு திடீர் பவுன்சரை வீசி தோனியை வீழ்த்த சரியான திட்டமிடல் நடந்தேறியது.
20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த தோனி அவுட் ஆனார். அவர் இறங்கும் போது 40 பந்துகளில் 60 ரன்கள் தேவை அவர் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏதோ ஒரு 5 ரன்கள் குறைவாகி விடுகிறது இப்போதெல்லாம் தோனியின் இன்னிங்ஸில். 20 பந்துகளில் 35 என்றால் வென்றிருக்கலாம். அவர் முதலில் பவுண்டரி பந்துகளில் ஒன்று, இரண்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும், ஆட்டத்தை கடைசி ஓவர் வரை இழுக்கக் கூடாது. கடைசியில் நமன் ஓஜாவின் அபாரமான கேட்சுடன் புனே இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
நெஹ்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சன் ரைசர்ஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் நன்றாக, சிக்கனமாக வீசினர். ஆனால் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆடம் ஸாம்பா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டது புனே அணிக்கு ஒரே ஆறுதல்
முன்னதாக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி ஆர்.பி.சிங்கின் அபாரமான பந்துக்கு வார்னர் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவண் 33 ரன்களை அதிகபட்சமாக எடுத்து அஸ்வினிடம் அவுட் ஆனார். கேன் வில்லியம்சன் 32 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் அபாரமாக ஆடி 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.
ஆடம் ஸாம்பா முதலில் யுவராஜ் சிங்கை காலி செய்தார், பிறகு 18-வது ஓவரில் அடுத்தடுத்து வில்லியம்சன், மோய்சஸ் ஹென்றிக்ஸ் ஆகியோரை வீழ்த்தி கடைசி ஓவரில் ஹூடா, ஓஜா, குமார் ஆகியோரை வீழ்த்தி 19 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஐபிஎல் கிரிக்கெட்டில் 2-வத் சிறந்த பந்து வீச்சாகும் இது. கடைசியில் டிண்டா ஓரு ஓவரில் 15 ரன்களைக் கொடுத்ததுதான் இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் வெற்றிக்குக் காரணம் என்றே கூற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT