Published : 17 Jun 2022 10:36 PM
Last Updated : 17 Jun 2022 10:36 PM
ராஜ்கோட்: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய தென்னாபிரிக்க அணிக்கு இந்தப் போட்டியிலும் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. டி காக் 14 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராத விதமாக ஹர்சல் படேல் ரன் அவுட் செய்ய அந்த அணியின் சரிவு தொடங்கியது. முன்னதாக, கேப்டன் தெம்பா பவுமா காயம் காரணமாக ரிட்டையர் ஹர்ட் முறையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த தொடரில் இதுவரை விக்கெட் எடுக்காமல் இருந்த அவேஷ் கான் முதல் விக்கெட்டாக ஒன்டவுனாக வந்த டுவைன் பிரிட்டோரியஸை டக் அவுட் செய்து தனது விக்கெட் வேட்டையை தொடங்கினார். அவருக்கு ஹர்ஷல் படேல் மற்றும் சஹால் இருவரும் கைகொடுக்க இந்திய பௌலர்கள் தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்களை நிலைக்கவிடாமல் செய்தனர். வருவதும் போவதுமாக இருந்த தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக வான் டெர் டஸ்ஸன் மட்டுமே 20 ரன்கள் எடுத்திருந்தார். மொத்தமாக மூவர் மட்டுமே அந்த அணியில் இரட்டை இலக்க எண்களை தொட்டிருந்தனர். மற்றவர்கள் அனைவரும் சிங்கிள் டிஜிட் ரன்களை மட்டுமே எடுக்க பரிதாப தோல்வி கண்டது. 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து மொத்தமாக தென்னாப்பிரிக்கா எடுத்தது 87 ரன்கள் மட்டுமே.
இதன்மூலம் 82 ரன்கள் என்ற வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். தென்னாப்பிரிக்காவும் இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளன என்பதால் நாளை மறுநாள் பெங்களூருவில் நடைபெறும் கடைசி போட்டி மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. அவேஷ் கான் இதுவரை இந்த தொடரில் ஓவருக்கு சராசரியாக 8 ரன்களை வழங்கினாலும் விக்கெட் ஏதும் கைப்பற்றாதது குறையாக இருந்தது. ஆனால், இன்றைய போட்டியில் அவேஷ் கான் நான்கு முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்தியா இன்னிங்ஸ்: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். அதனால் இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணிக்கு பேட்டிங்கில் எதிர்பார்த்த சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. அணி 81 ரன்கள் எடுத்த போது ருதுராஜ், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், பந்த் என டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி இருந்தனர். இதில் கிஷன் மட்டுமே 27 ரன்கள் எடுத்து ஆறுதல் கொடுத்தார். பின்னர் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்தனர்.
இருவரும் 33 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தனர். பாண்டியா 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்திருந்தார். 15 ஓவர்கள் முடிவில் இந்தியா வெறும் 96 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் 73 ரன்களை இந்தியா எடுத்தது. அதற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா உதவினர். 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை எடுத்தது இந்தியா. இப்போது தென்னாப்பிரிக்க அணி 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT