Published : 17 Jun 2022 03:59 PM
Last Updated : 17 Jun 2022 03:59 PM
ராஜ்கோட்: பலமுறை அணியில் தேர்வாகாமல் டிராப் செய்யப்பட்ட சூழலிலும் இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென்ற கனவு மட்டும் என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்.
இந்திய அணிக்காக இதுவரை டி20 கிரிக்கெட்டில் 97 வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். டி20 பார்மெட்டுக்கான இந்தப் பட்டியலில் இந்திய அணிக்காக நான்காவது வீரராக அறிமுகமானவர் தான் தினேஷ் கார்த்திக் (டிகே). இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடியவர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2006 டிசம்பர் 01-ஆம் தேதியன்று நடைபெற்ற போட்டி அது. அதில் 28 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அசத்தினார் டிகே. அந்தப் போட்டி நடந்து முடிந்து சுமார் 15 ஆண்டு காலம் கடந்துவிட்டது. இன்றும் இந்திய அணியில் அவர் விளையாடி வருகிறார். அவருடன் அந்தப் போட்டியில் விளையாடிய வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த 15 ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டில் நடந்துள்ள மாற்றங்கள் குறித்து பிசிசிஐ டிவியில் மனம் திறந்து பேசியுள்ளார் டிகே. "கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடிய முதல் டி20 போட்டியில் விளையாடிவிட்டு மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவது நல்லதொரு உணர்வை தருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்னதான ஆட்டத்துடன் ஒப்பிடும்போது இன்றைய கிரிக்கெட் முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. அதுவும் டி20 பார்மெட்டில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த பல்வேறு கட்ட வளர்ச்சியில் நானும் ஒரு பங்காக அணியில் இருந்துள்ளேன். இப்போதும் தேசிய அணியில் ஒரு அங்கமாக இருப்பதை பெருமையாக கருதுகிறேன். இந்தியாவுக்காக விளையாடுவது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் இங்கு இருக்க ஒருவகையில் அதிர்ஷ்டசாலி என்றும் சொல்லுவேன்.
இங்கிருக்கும் சூழல் மிகவும் அபரிமிதமான ஒன்று. மூன்று ஆண்டுகளாக இதை வெளியில் இருந்து பார்த்து வந்தேன். அணியில் அங்கமாக உள்ள நான் எனது ஒவ்வொரு நொடியையும் இங்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
பலமுறை அணியில் இடம் பெற்று விளையாடும் வாய்ப்பை நான் இழந்துள்ளேன். ஆனால் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு மட்டும் என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது. அதனால் டொமஸ்டிக் கிரிக்கெட், ஐபிஎல் என எதில் நான் விளையாடினாலும் இந்தியாவுக்காக நான் விளையாட வேண்டுமென்ற உந்து சக்தி எனக்குள் தொடர்ந்து கொண்டே இருந்தது. அது தான் இந்த பத்து ஆண்டுகளாக என்னை அசராமல் முன்னோக்கி நகர்த்தியது. இந்த பயணத்தில் எனக்கு பக்கபலமாகவும், உறுதுணையாகவும் சிறப்பான மனிதர்கள் உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இன்று விளையாடுகிறது. அயர்லாந்து செல்லும் இந்திய டி20 அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம் பெற்றால் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரை 188.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் நிறைவு செய்திருந்தார் டிகே. 16 போட்டிகளில் விளையாடி 330 ரன்கள் குவித்திருந்தார். இறுதி ஓவர்களில் பந்தை பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறக்கவிட்டு அசத்தியிருந்தார்.
#TeamIndia comeback
Motivation level
His journey from India's 1st T20I to now
You wouldn't want to miss this special interview with @DineshKarthik. #INDvSA | @Paytm
Full interview https://t.co/ktexXftzL0 pic.twitter.com/F5YSS6D4Qi
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT