Published : 15 Jun 2022 05:38 PM
Last Updated : 15 Jun 2022 05:38 PM
கொல்கத்தா: இந்தியா மற்றும் ஹாங்காங் கால்பந்தாட்ட அணிகள் விளையாடிய போட்டியில் ரசிகர்கள் 'வந்தே மாதரம்' என ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர். சமூக வலைதளத்தில் இந்தக் காட்சி கவனம் பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் (VYBK) மைதானத்தில் 2023 ஆசியக் கோப்பை தொடருக்கான மூன்றாவது தகுதிச் சுற்றுக்கான போட்டியில் இந்திய அணி, ஹாங்காங்கிற்கு எதிராக விளையாடியது.
இந்தப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இந்திய அணி. அதோடு அடுத்தடுத்த ஆசிய கோப்பைக்கான தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளது இந்தியா.
இந்தத் தொடரில் ஐந்தாவது முறையாக பங்கேற்க இந்தியா தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்திய கால்பந்து அணியின் சிறந்த சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியை நேரில் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் மைதானத்தின் பார்வையாளர்களுக்கான மாடத்தில் இருந்தபடி 'வந்தே மாதரம்' என ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர். அதை அப்படியே வீடியோவாக பதிவு செய்து, ரசிகர்களின் பரவசத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது இந்திய கால்பந்து அணி.
இந்திய அணி மூன்றாவது தகுதி சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. ஹாங்காங், கம்போடியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளில் வீழ்த்தியுள்ளது. இதற்கு முன்னர் நடந்த ஆசிய கோப்பை தொடரில் மூன்று முறை குரூப் சுற்றோடு வெளியேறி உள்ளது இந்தியா. ஒரே ஒரு முறை மட்டுமே இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT