Published : 14 Jun 2022 10:31 PM
Last Updated : 14 Jun 2022 10:31 PM
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வென்று இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
180 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணியில் பவுமா, கிளாசன், டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் அபாரமான பேட்டிங் ஃபார்மில் இருப்பதால், இம்முறையும் சிறந்த ஓப்பனிங் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கினார் இந்திய வீரர் அக்சர் படேல். தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமாவை அவர் 8 ரன்களுக்கு அவுட் ஆக்கினார். முதல் சரிவை அக்சர் தொடங்கி வைக்க, அடுத்தடுத்த சரிவை இந்திய வீரர்கள் ஹர்சல் படேல் மற்றும் யுஸ்வேந்திர சஹால் பார்த்துக்கொண்டனர்.
இவர்கள் இருவரும் எந்தவொரு தென்னாப்பிரிக்க வீரரையும் 30 ரன்கள் வரை எடுக்கவிடவில்லை. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 29 ரன்கள் எடுத்திருந்தார். இருவரும் இணைந்து சீரான இடைவெளியில் தென்னாப்பிரிக்க வீரர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக முதல் வெற்றியை நோக்கி நகர்ந்தது. இறுதி ஓவரில் 49 ரன்கள் தேவைப்பட்ட போதே இந்திய அணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. எனினும், 9 விக்கெட்கள் இழந்திருந்த அந்த அணியின் கடைசி விக்கெட்டை கடைசி ஓவரின் முதல் பந்திலேயே வீழ்த்தி நான்காவது விக்கெட்டை ஹர்சல் படேல் எடுக்க இந்திய அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியா இன்னிங்ஸ்: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். அந்த அணி இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்தத் தொடரில் மேலும் ஒரு போட்டியில் வெற்றியை பதிவு செய்வதன் மூலம் அந்த அணி தொடரையும் வெல்லும்.
இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 97 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ருதுராஜ், 35 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் இஷான் கிஷன் அரை சதம் பதிவு செய்தார். அவர் 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் வந்த ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். இருந்தாலும் ஹர்திக் பாண்டியா, 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆறுதல் கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது இந்தியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT