Published : 11 Jun 2022 10:09 PM
Last Updated : 11 Jun 2022 10:09 PM
மிதாலி ராஜ் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காலத்தில் மைதானங்கள் ஆள் அரவமின்றி வெறுமையாக இருக்கும். பெண்கள் கிரிக்கெட்டுக்கு தொலைக்காட்சி நேரலையெல்லாம் கிடையவே கிடையாது. இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் மிதாலி ராஜ் அறிமுகமானார்.
முதல் சர்வதேசப் போட்டியில் ஆடியபோது அவருக்கு 16 வயதுதான். அந்த முதல் போட்டியிலேயே சதமடித்துத் தனது வருகையை அழுத்தமாகப் பதிவுசெய்தார். இந்திய அணிக்கு முதல் முறையாக அவர் கேப்டன் ஆனபோது, அவருக்கு 22 வயதுதான். 2005-ல் கேப்டனாக இந்திய அணியை அவர் வழிநடத்திய முதல் உலகக்கோப்பைத் தொடரிலேயே இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார்.
இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆடியது அதுதான் முதல் முறை. நீண்ட காலத்துக்குப் பிறகு அந்தப் போட்டிக்குத்தான் தொலைக்காட்சி நேரலையும் சாத்தியப்பட்டது. இந்தியாவுக்காகப் பெண்களும் கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்பதே பலருக்கும் அதன்பிறகுதான் தெரியவந்தது.
கிரிக்கெட் உலகில் செல்வத்தில் கொழித்த கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ. ஆனால், அவர்களே ஆண் கிரிக்கெட்டர்களையும் பெண் கிரிக்கெட்டர்களையும் சமமாக நடத்துவதில்லை. கடந்த ஆண்டில், இங்கிலாந்து தொடருக்கான பயணத்துக்காக ஆண் கிரிக்கெட்டர்களுக்குத் தனி சொகுசு விமானத்தை ஏற்பாடு செய்துவிட்டு, பெண்களுக்கு வழக்கமான விமானப் பயணத்தையே பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்தது.
இந்தப் பாலின பாகுபாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிசிசிஐ, அதன் பிறகு பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் தனி விமானத்தை ஏற்பாடு செய்துகொடுத்தது.
2020-களிலேயே இதுதான் நிலைமை. எனில், 2005-க்கு முன்பான காலகட்டங்களை யோசித்துப் பாருங்கள். அப்போது, பெண்கள் கிரிக்கெட் பிசிசிஐயின் கட்டுப்பாட்டிலேயே கிடையாது. அதற்கென ஒரு தனி அமைப்பு இயங்கிக்கொண்டிருந்தது. வீராங்கனைகளுக்கு முறையான பயணப்படிகளும் பயிற்சி வசதிகளுமேகூடக் கிடைக்காது.
இந்த 23 ஆண்டுகளில் ஏகப்பட்ட காயங்கள், சர்ச்சைகள், பயிற்சியாளர்களுடன், சக வீராங்கனைகளுடன் கருத்து வேறுபாடு என எத்தனையோ தடங்கல்கள் மிதாலி ராஜுக்கு ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் எந்த இடத்திலுமே மிதாலி ராஜை ஒதுக்கிவிட்டு, இந்திய அணி என்கிற ஒரு குழுவை யோசித்தே பார்க்க முடியாது.
மிதாலி ராஜ் தனது 200-வது ஒருநாள் போட்டியை ஆடிய சமயத்தில், இந்திய அணியே ஏறக்குறைய 260 போட்டிகளில்தான் ஆடியிருந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். ஆக, இங்கே இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டைப் பற்றிப் பேச வேண்டுமெனில், மிதாலி ராஜின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேசவே முடியாது. தவிர்க்க நினைத்தால் பெண்கள் கிரிக்கெட் பற்றிப் பேசுவதற்குப் பெரிதாக ஒன்றும் இருக்காது.
இன்றைக்குப் பெண்கள் கிரிக்கெட் கொஞ்சமேனும் கவனிக்கப்படுகிறதெனில், அதற்குத் திருமணமே செய்துகொள்ளாமல் சமூக அழுத்தங்களுக்குத் தன்னை இரையாக்கிக்கொள்ளாமல், உறுதியாக கிரிக்கெட்டை மட்டுமே உயிராக நினைத்து, இந்திய அணிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட மிதாலி ராஜ் போன்றோரே மிக முக்கியக் காரணம்.
> இது, உ.ஸ்ரீராம் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT