Published : 02 May 2016 09:50 AM
Last Updated : 02 May 2016 09:50 AM
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பையிடம் தோல்வி தழுவியதையடுத்து 8 போட்டிகளில் 6-ல் தோற்றுள்ள புனே அணியின் கேப்டன் தோனி கடும் ஏமாற்றமடைந்துள்ளார்.
சரியான அணித்தேர்வை செய்வதற்கும் அவருக்கு சரிவரத் தெரியவில்லை. மாற்றத்திற்கான நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. தமிழக வீரர் பாபா அபராஜித்தை தொடர்ந்து 3-வது சீசனாக உட்கார வைத்து மகிழ்கிறார் தோனி.
ஈஸ்வர் பாண்டே, இர்பான் பத்தான் ஆகியோர் இதுவரை கண்டுகொள்ளப்படவேயில்லை. ஏன் உஸ்மான் கவாஜா ஒரு சிறந்த வீரர் அவருக்கும் வாய்ப்பு வழங்காமல் பேட்ரிக் ஹேண்ட்ஸ்கோம்ப் என்பவருக்கு வாய்ப்பு வழங்கினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 112தான். இவரை ஒப்பிடும் போது இர்பான் பத்தான் எவ்வளவோ விதத்தில் உபயோகமான வீரர், இன்னும் சொல்லப்போனால் டிண்டாவை விடவும், ரஜத் பாட்டியாவை விடவும் எந்த விதத்தில் இர்பான் பத்தான் குறைந்தவர் என்பது தெரியவில்லை, இந்தக் கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினால், அவர்கள் மீது எரிச்சலடைவார், அருகில் அழைப்பார், தோள் மீது கைபோடுவார், பின்னால் தட்டிக் கொடுப்பார், ஆனால் பதில் கிடைக்காது.
அதே போல்தான் பாபா அபராஜித்துக்கு வாய்ப்பு வழங்காததும் சர்ச்சைக்குரியதே. இந்நிலையில் வழக்கமான தோல்விக்குப் பிறகு வழக்கம்போல் கூறிய தோனி,
“10-வது ஓவருக்குப் பிறகு நாங்கள் சரியாக ஆடவில்லை. என்னையும் சேர்த்துத்தான். இந்தப் பிட்சில் 24 பந்துகளில் 23 ரன்கள் என்பது உண்மையில் உதவிகரமானதல்ல.
சில வேளைகளில் விக்கெட்டுகள் விழும்போது நாங்கள் அதிகமாக யோசிப்பதாகப் படுகிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் களத்தில் இறங்கி சூழ்நிலைகளைப் பாராமல் நம்மை வெளிப்படுத்திக் கொள்வதைத்தான். பந்து வீச்சில் லேசான முன்னேற்றம் தெரிகிறது, ஆனால் எதுவானாலும் தோல்வியடைந்து கொண்டேயிருந்தால் இதனாலும் பயனில்லை.
வரும் போட்டிகளில் சில கொள்கைகளை மாற்றுவோம், சில புதிய முயற்சிகளை மேற்கொள்வோம். நிச்சயம் அந்த மாற்றங்கள் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்”
இவ்வாறு கூறினார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT