Published : 10 Jun 2022 04:49 PM
Last Updated : 10 Jun 2022 04:49 PM

ஜூன் 23-ல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்கம்: கோவையில் ஜூலை 31-ல் இறுதிப் போட்டி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடர் வரும் 23-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது. ஜூலை 31-ஆம் தேதி வரையில் தொடர் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி முதன்முறையாக கோவையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎல் தலைமை செயல் அதிகாரி பிரசன்னா கண்ணன் கோவையில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 6-வது டிஎன்பிஎல் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி வரை திருநெல்வேலி, திண்டுக்கல் (நத்தம்), கோவை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பேந்த்தர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் 28 நாட்களில் 32 போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் போட்டியானது திருநெல்வேலியில் உள்ள ஐ.சி.எல். சங்கர் நகர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், நடப்பு சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானம், சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்திலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. டிஎன்பிஎல் வரலாற்றில் முதன்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் இம்முறை போட்டி எதுவும் நடைபெறவில்லை.

இதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் அணிகளில் விளையாடும் சாய் சுதர்சன் உள்ளிட்ட வீரர்களும் பங்கேற்கின்றனர்.

முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை பேடிஎம் மூலமாக தொடங்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை ரூ.100 மட்டுமே. அடுத்தடுத்த போட்டிகளுக்கு அந்தந்த வாரத்தில் டிக்கெட்டுகளைப் பெறலாம் என அவர் தெரிவித்தார்.

டிஎன்பிஎல் தலைவர் கே.சிவகுமார், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் லட்சுமிநாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x