Published : 08 Jun 2022 02:32 PM
Last Updated : 08 Jun 2022 02:32 PM
இந்திய சைக்கிளிங் வீராங்கனை ஒருவர், இந்திய பயிற்சியாளர் ஆர்.கே.ஷர்மா மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய விளையாட்டு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தினால் ஸ்லோவேனியா (Slovenia) சென்றுள்ள இந்திய அணியை நாடு திரும்ப இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய அணியின் மூத்த சைக்கிளிங் வீராங்கனை ஒருவர், அணியின் பயிற்சியாளர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். "பயிற்சியாளர் என்னை அவருடன் ஒரே அறையில் தங்குமாறு வற்புறுத்தினார். அவரது மனைவியை போல நான் நடந்து கொள்ளுமாறு சொன்னார்" என புகாரில் தெரிவித்துள்ளார் அந்த வீராங்கனை.
இந்தப் புகாரை அவர் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக இரண்டு குழுக்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். ஒன்று இந்திய விளையாட்டு ஆணையத்தின் குழு, மற்றொன்று இந்திய சைக்கிள் கூட்டமைப்பின் விசாரணை குழு.
5 வீரர்கள் மற்றும் ஒரே ஒரு வீராங்கனை அடங்கிய இந்திய சைக்கிளிங் அணி ஸ்லோவேனியாவிற்கு சென்றிருந்தது. வரும் 14-ஆம் தேதி வரையில் பயிற்சி மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தப் பயணத்தில் பெண் பயிற்சியாளர் யாரும் பயணம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில்தான் பாலியல் புகாரை அளித்துள்ளார் அந்த வீராங்கனை.
"வீராங்கனையின் புகாரை பெற்றதை தொடர்ந்து முதலில் அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவரை இந்தியாவிற்கு திரும்ப செய்துள்ளோம். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைத்துள்ளோம். இதுகுறித்து விரைவாக விசாரித்து சிக்கலுக்கு தீர்வு காண உள்ளோம்" என தெரிவித்துள்ளது இந்திய விளையாட்டு ஆணையம்.
இந்தச் சம்பவம் மே 29-ஆம் தேதியன்று நடைபெற்றதாக அந்த வீராங்கனை தெரிவித்துள்ளார். ஜூன் 3-ஆம் தேதி அன்று அவர் நாடு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT