Published : 19 May 2016 12:04 PM
Last Updated : 19 May 2016 12:04 PM

காயத்துடன் 4-வது அதிரடி சதம்; விராட் கோலி சாதனை: 2-வது இடத்துக்கு முன்னேறியது பெங்களூரு

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது இடத்துக்கு முன்னேறியது.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 14 ஓவர்களில் 203 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களையே எடுத்து படுதோல்வி கண்டது.

கிறிஸ் கெயில், விராட் கோலி இணைந்து 11 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுக்காக 147 ரன்கள் விளாசித் தள்ளினர், கிறிஸ் கெய்ல் 4 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 32 பந்துகளில் 73 ரன்கள் விளாசித்தள்ளினார். விராட் கோலி 28 பந்துகளில் 50 ரன்கள் என்று வந்து பிறகு 47 பந்துகளில் சதம் கண்டு 50 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். விராட் கோலி தனது 4-வது ஐபிஎல் சதத்தின் மூலம் 4,002 ரன்களுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள் குவித்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். சுரேஷ் ரெய்னாவின் 3,985 ரன்கள் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

மைதானம் நெடுக கோலியும், கெய்லும் பந்தை சிதறடிக்க எதிரணி கேப்டன் முரளி விஜய்யால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சமாக ரன் கொடுத்த சந்தீப் சர்மாவின் ஓவருக்கு ரன் சராசரி 9.66 என்பது குறிப்பிடத்தக்கது. அக்சர் படேல், கே.சி.கரியப்பா, மோஹித் சர்மா, கைல் அபாட் ஆகியோர் செமத்தியாக சாத்துமுறை வாங்கினர்.

விரட்டலின் போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் எஸ்.அரவிந்த், முரளி விஜய், ஹஷிம் ஆம்லா ஆகியோரை வெளியேற்றினார். பிறகு நடுக்கள வீரர்களை யஜுவேந்திர சாஹல் வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 12-வது ஓவரில்தான் கிங்ஸ் லெவன் தட்டுத்தடுமாறி 100 ரன்களை எடுத்தனர். 14-வது ஓவருக்குப் பிறகு மழை வந்தது. ஒருதலைபட்சமான ஆட்டத்தில் விராட் கோலி மீண்டும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

15 ஓவர்கள் ஆட்டத்தில் சதம் எடுத்தது பெரிய விஷயம், இதனை நான் எதிர்பார்க்கவில்லை என்று கோலி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x