Published : 06 Jun 2022 07:43 PM
Last Updated : 06 Jun 2022 07:43 PM
மும்பை: நடந்து முடிந்த 15-வது ஐபிஎல் சீசனில் அதிவேக பந்துகளாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். இப்போது இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடவுள்ளார்.
இந்த நிலையில் தனது ரோல் மாடல் யார்? யார்? என்பது குறித்து மனம் திறந்துள்ளார் அவர். சராசரியாக மணிக்கு 150+ கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் படைத்தவர் உம்ரான். இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களை வீழ்த்தினார். அதோடு வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் அவர் வென்றுள்ளார். அவருக்கு 22 வயது தான் ஆகிறது.
ஐபிஎல் அரங்கில் அவரது பந்துவீச்சை கண்டு அசந்து போன கிரிக்கெட் வீரர்கள் 'அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தாக வேண்டும்' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது பந்து வீச்சை பார்க்கும்போது தனக்கு முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வாக்கர் யூனிஸை நினைவுபடுத்துவதாக சொல்லி இருந்தார் ஆஸ்திரேலிய முன்னாள் பவுலர் பிரெட் லீ. ஆனால் தனது ரோல் மாடல் அவர் இல்லை என மறுத்துள்ளார் உம்ரான்.
"நான் வாக்கர் யூனிஸை ஃபாலோ செய்யவில்லை. எனது பவுலிங் நியூட்ரல் ஆனது. பும்ரா, ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார்தான் எனது ரோல் மாடல். நான் அவர்களை பின்பற்றி தான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். தேசிய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார் உம்ரான்.
"நிச்சயம் மணிக்கு 150+ கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவேன். ஆனால், அதற்காக ஷோயப் அக்தரின் அதிவேக பந்துவீச்சு சாதனையை முறியடிக்க வேண்டுமென நான் கவனம் எதுவும் செலுத்தவில்லை. அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும். அது மட்டும்தான் எனது எண்ணமெல்லாம் நிறைந்திருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...