Published : 06 May 2016 02:26 PM
Last Updated : 06 May 2016 02:26 PM

முயன்று அடைந்த வெற்றி: தோனி பெருமிதம்

டெல்லி அணிக்கு எதிரான வெற்றி புனே அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று அதன் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு டெல்லி யில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி மோதியது. பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த புனே அணிக்காக இப்போட்டியில் கவா ஜா, பெய்லி ஆகியோர் முதல் முறையாக களம் இறங்கினர். மறுபுறம் டெல்லி அணி, ஜாகிர் கானுக்கு பதில் ஜே.பி.டுமினி தலைமையில் களம் இறங்கியது.

டாஸில் வென்ற புனே அணி யின் கேப்டன் தோனி, டெல்லியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். டெல்லி அணியின் முன்னணி வீரர்கள் ஒருவர்கூட நிலைத்து ஆடி 40 ரன்களைக் கடக்கவில்லை. ஜே.பி.டுமினி அதிகபட்சமாக 34 ரன்களையும், கருண் நாயர் 32 ரன்களையும் எடுக்க டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்தது. புனே அணியில் போலண்ட், ரஜத் பாட்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

வெற்றிபெற 163 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும், கவாஜாவும் களம் இறங்கினர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. அணியின் ஸ்கோர் 59-ஆக இருந்தபோது அமித் மிஸ்ராவின் பந்தில் கவாஜா (30 ரன்கள்) ஆட்டம் இழந்தார். இருப்பினும் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ரஹானே, சவுரப் திவாரி (21 ரன்கள்), தோனி (27 ரன்கள்), பெரைரா (14 ரன்கள்) ஆகியோருடன் சேர்ந்து புனே அணியை வெற்றிபெற வைத்தார். ரஹானே 48 பந்துகளில் 63 ரன்களைக் குவிக்க, புனே அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப் புக்கு 166 ரன்களை எடுத்து ஜெயித் தது. இப்போட்டியில் டெல்லி அணிக்காக பந்துவீசிய ஷமி 3.1 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார்.

போட்டிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஜே.பி.டுமினி நிருபர்களிடம் கூறியதாவது:

புனே அணிக்கு எதிரான போட்டி யில் எங்கள் அணியில் ஜாகிர் கான், கிறிஸ் மோரிஸ், டி காக், நதீம் என்று 4 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்திருந்தோம். அடுத்தடுத்து போட்டிகள் நடப்பதால் வீரர்களுக்கு இந்த ஓய்வு தரப்பட்டது. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டாலும் இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றிபெற முடியும் என்று நம்பினோம். ஆனால் பேட்டிங்கில் 20 ரன்கள் குறைவாக எடுத்ததால் நாங்கள் தோற்றோம்.

இவ்வாறு டுமினி கூறினார்.


ஆட்டம் முடிந்தவுடன் வெற்றி குறித்து தோனி கூறியதாவது:

பவுலர்கள் திட்டமிட்டபடி வீசினர். 160 ரன்களுக்க்கு டெல்லியை மட்டுப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. பவுலிங்தான் எங்களது கவலையாக இருந்து வரும் நிலையில் இந்த வெற்றியின் மூலம் நிறைய உடன்பாடான அம்சங்களை எடுத்துக் கொள்கிறோம்.

களவியூகத்திற்கு ஏற்ப பந்து வீசினர், திட்டமிட்டபடி பந்தை எங்கு வீச வேண்டுமோ அப்படி வீசினர். இறுதிக் கட்ட ஓவர்களில் நல்ல பவுலர்கள் பேட்ஸ்மென்களை சாதுரியமாக ஏமாற்றுபவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

களத்தில் ஆடும்போது அசவுகரியமாக உணர்ந்தேன். டெல்லி ஸ்பின்னர்கள் நன்றாக வீசினார்கள். பிட்சில் பந்துகள் கொஞ்சம் மெதுவாக வரத் தொடங்கியது. மிஸ்ரா, தாஹிர் அபாரமாக வீசினர். மொத்தமாக முயன்று அடைந்த வெற்றி இது. 5 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு நம் வழியில் வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

இந்த வெற்றி அவசியமானது, எங்களுக்கு சிறிது தன்னம்பிக்கை அளிக்கும் வெற்றி இது என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x