Published : 01 Jun 2022 09:50 PM
Last Updated : 01 Jun 2022 09:50 PM
ஜகர்த்தா: நடப்பு ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் வெண்கலம் வென்றுள்ளது இந்திய அணி. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானை 1-0 என வீழ்த்தியது இந்தியா.
இந்தோனேசிய நாட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை - 2022 தொடர் ஆரம்பமானது. இந்தத் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன.
முதல் சுற்றில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றது இந்தியா. அதனால் கோல்கள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
இன்று மாலை (ஜூன் 1) நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
மேலும், இந்தத் தொடரில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளாக உள்ள ஜப்பான், தென் கொரியா, மலேசியா ஆகிய அணிகள் 2023 ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்திய அணி தொடரை நடத்தும் அணியாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ஏற்கனவே தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை தென்கொரியாவும், இரண்டாவது இடத்தை மலேசியாவும் வென்றுள்ளன. ஜப்பான் அணி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT