Published : 22 Jun 2014 12:28 PM
Last Updated : 22 Jun 2014 12:28 PM

கானா - ஜெர்மனி த்ரில் டிரா: ரொனால்டோ உலக சாதனையை சமன் செய்தார் க்லோஸ்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பிரிவு ஜி போட்டியில், பலமான ஜெர்மனி அணிக்கு எதிராக கானா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரு அணிகளும் 2 கோல்கள் அடிக்க ஆட்டம் சமன் ஆனது.

இந்த ஆட்டத்தில் பிரேசில் வீரர் ரொனால்டோவின் 15 கோல்கள் சாதனையைச் சமன் செய்தார் ஜெர்மனி வீரர் மிராஸ்லாவ் க்லோஸ். இடைவேளைக்கு முன்பாக இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனி வீரர் மரியோ கூட்சீ 51வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். ஆனால் கானா அணியின் ஆந்ரே அயூ 54வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார்.

63வது நிமிடத்தில் கானாவின் அசமோ கியான் ஒரு கோல் அடித்த்து கானாவை 2- 1 என்று முன்னிலைக்கு இட்டுச் சென்றவுடன் இன்று ஒரு பெருந்தோல்வி காத்த்திருக்கிறது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் 36 வயது மிராஸ்லோவ் க்லோஸ் 71 வது நிமிடத்தில் அபாரமான கோல் ஒன்றை அடித்து ரொனால்டோவின் உலக சாதனையைச் சமன் செய்ததோடு ஜெர்மனி டிரா செய்யவும் உதவினார்.

இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனியின் அன்றைய ஹேட்ரிக் சாதனை வீரர் தாமஸ் முல்லர் அருமையாக ஒரு பாஸை அளிக்க கூட்சீ அதனை கோலாக மாற்றினார். இந்த முன்னிலையை நீண்ட நேரம் ஜெர்மனியினால் தக்க வைக்க முடியவில்லை. கானா வீரர் ஹாரிசன் அஃபுல் வலது புறமிருந்து ஒரு அபாரமான ஷாட்டை ஆட ஆந்ரே அயூ கோலுக்கு 6 அடி முன்னால் இருந்து எம்பி தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார் கானா சமன் செய்தது.

இதற்கு சரியாக 9 நிமிடங்கள் கழித்து, சல்லே மன்டாரி ஜெர்மனியின் தடுப்பட்ட வீரர்களை இரண்டாகப் பிளது பந்தைக் கடத்திச் சென்று அசமோ கியானுக்கு அருமையாக பாஸ் அடிக்க அவருக்கு அதிசயமாக நிறைய இடைவேளி இருந்தது. விடுவாரா வாய்ப்பை? நேராக ஜெர்மனி கோல் கீப்பர் மானுயெல் நியூயரைத் தாண்டி கோல் அடித்தார், ஜெர்மனி அதிர்ச்சி அடைந்தது. காரணம் 2- 1 என்று கானா முன்னிலைப் பெற்றது.

பிறகே ஜெர்மனிக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்தது. அதுவும் உலக சாதனையை சமன் செய்யக் காத்திருக்கும் மிராஸ்லோவ் க்லோஸிற்கு வாய்ப்புக் கிடைத்தது. கார்னர் ஷாட்டை நெரிசலான கானா வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி கோலாக மாற்றினார். அதுவே ஜெர்மனி சமன் செய்த கோல் மற்றும் க்லோஸ், பிரேசில் நட்சத்திரம் ரொனால்டோவின் உலக சாதனை கோலை சமன் செய்த கோல்!!

இந்த ஆட்டம் டிரா ஆனதைத் தொடர்ந்து பிரிவு ஜி-யில் ஜெர்மனி ஒரு வெற்றி ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. யு.எஸ். அணி கானாவை வீழ்த்தியதன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ளது. கானா போர்ச்சுக்கல் அணியையும், ஜெர்மனி யு.எஸ். அணியையும், யு.எஸ் அணி போர்ச்சுகல்லுடன் விளையாட வேண்டியிருப்பதால் இந்தப் பிரிவும் இழுபறி நிலையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x