Published : 27 May 2022 07:34 PM
Last Updated : 27 May 2022 07:34 PM
மும்பை: தோனியின் உலகக் கோப்பை ஃபைனல் சிக்ஸர்தான் தனது இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார், நடப்பு மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில் வெலாசிட்டி அணிக்காக விளையாடி வரும் கிரண் நவ்கிரே.
கடந்த 2018 முதல் இந்திய கிரிக்கெட் வாரியம், மகளிர் டி20 சேலஞ்ச் தொடரை நடத்தி வருகிறது. இதனை மகளிர் ஐபிஎல் எனவும் சொல்லலாம். இந்தத் தொடரில் சூப்பர் நோவாஸ், டிரையல் பிளேசர்ஸ் மற்றும் வெலாசிட்டி என மொத்தம் மூன்று அணிகள் பங்கேற்று விளையாடும். நடப்பு ஆண்டுக்கான இறுதிப் போட்டியில் சூப்பர் நோவாஸ் மற்றும் வெலாசிட்டி அணிகள் விளையாடுகின்றன. நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் இரு அணிகளும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற டிரையல் பிளேசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக பேட் செய்து அசத்தினார் வெலாசிட்டி அணியின் வீராங்கனை கிரண். 27 வயதான அவர் 34 பந்துகளில் 69 ரன்களை சேர்த்து அசத்தினார். இதில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். வெலாசிட்டி அணியை 158 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஃபைனலுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இருந்தது டிரையல் பிளேசர்ஸ். ஆனால் தனது அதிரடி ஆட்டம் மூலம் அதனை தவிடு பொடியாக்கினார் கிரண். அவரது ஆட்டத்தால் இப்போது வெலாசிட்டி ஃபைனலுக்கும் முன்னேறியுள்ளது.
"2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி விளாசிய அந்த மேட்ச் வின்னிங் சிக்ஸர் தான் எனது இன்ஸ்பிரேஷன். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் நானும் அப்படி ஆட வேண்டும் என அப்போது முடிவு செய்தேன். அண்மையில் முடிந்த டொமஸ்டிக் கிரிக்கெட்டில் நான் சிறப்பாக விளையாடி இருந்தேன். அதனால் ரன் குவிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போது அது பலித்துள்ளது. பொதுவாகவே எனக்கு டாட் பால் ஆட பிடிக்காது" என தெரிவித்துள்ளார் கிரண்.
அண்மையில் முடிந்த மகளிர் சீனியர் டி20 கோப்பை தொடரில் நாகலாந்து அணிக்காக அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 162 ரன்கள் எடுத்திருந்தார் கிரண். அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவரும் அவர்தான். மொத்தம் 7 இன்னிங்ஸ் விளையாடி 525 ரன்களை எடுத்திருந்தார். 4 அரை சதம் மற்றும் ஒரு சதம் இதில் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT