Published : 27 May 2022 05:02 PM
Last Updated : 27 May 2022 05:02 PM
ராவல்பிண்டி: அவர் கம்பேக் கொடுத்துள்ள விதம் தனக்குப் பிடித்துள்ளதாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் (டிகே) குறித்து தனது கருத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் பதிவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2019-க்கு பிறகு மீண்டும் இடம் பிடித்துள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக். 36 வயதான அவரை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதற்கு காரணம் நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் வெளிப்படுத்தி வரும் அபார ஆட்டம். பெங்களூரு அணிக்காக நடப்பு சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 324 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187.28. லக்னோ அணிக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் அதிரடியாக ரன் குவித்து அசத்தினார்.
இந்நிலையில், அவரது கம்பேக் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் அக்தர்.
"பொதுவாக நான் யாருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்தும் பேச மாட்டேன். அதை தவிர்ப்பேன். ஆனால் டிகே விஷயத்தில் நான் அதை சொல்லியாக வேண்டும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரத்தை எதிர்கொண்டுள்ளார். ஆனால் அதையும் கடந்து வந்துள்ளார். அது சிறப்பானதொரு கம்பேக்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நான் அறிவேன். அது குறித்து கொஞ்சம் படித்தும் உள்ளேன். அதனால் தான் சொல்கிறேன் அவர் கம்பேக் கொடுத்துள்ள விதத்தை நான் விரும்புகிறேன் என்று. அவருக்கு வெல் டன் தெரிவித்துக் கொள்கிறேன். இதைத்தான் ஆட்டிட்யூட் என்பார்கள்" என தெரிவித்துள்ளார் அக்தர்.
இன்று நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT