Published : 25 May 2022 12:12 AM
Last Updated : 25 May 2022 12:12 AM
மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் அந்த 11 மாதங்கள் நான் விளையாடி இருந்தால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பேன் என தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சேவாக். இந்திய அணிக்காக 1999 முதல் 2013 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி உள்ளார். மொத்தம் 374 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். இதில் 104 டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 8586 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரர்.
கடந்த 2008-இல் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 319 ரன்கள் ஒரே இன்னிங்ஸில் விளாசி இருந்தார். இன்றுவரை இது தான் தனியொரு இந்திய பேட்ஸ்மேனின் டாப் ஸ்கோர். இரண்டாவது இடத்திலும் அவர் தான் 309 ரன்களுடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் கருண் நாயர் 303 ரன்களுடன் உள்ளார்.
"அந்த 11 மாதங்கள் மட்டும் நான் விளையாடி இருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் 10000 ரன்களுக்கு மேல் கடந்திருப்பேன். சமயங்களில் அது மிகவும் வலி கொடுக்கிறது" என தெரிவித்துள்ளார் சேவாக். கடந்த 2007 ஜனவரிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மோசமான ஃபார்மில் அவர் தவித்து வந்தார்.
சரியாக 11 மாதங்களுக்கு பிறகு 2008-இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணிக்காக 2001 வாக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான சேவாக், 2013 வரையில் விளையாடி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT