Published : 02 May 2016 08:53 AM
Last Updated : 02 May 2016 08:53 AM

மீண்டும் தோனி அணி சொதப்பல்: ரோஹித் இன்னிங்ஸில் மும்பை வெற்றி

புனேயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 29-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோனியின் ரைசின் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி தழுவியது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட புனே அணி பும்ரா, ஹர்பஜன், மெக்லினாகன் ஆகியோரது பந்துவீச்சினாலும் கடைசியில் தோனியின் பயனற்ற சொதப்பல் பேட்டிங்கினாலும் 20 ஓவர்களில் 159/5 என்று முடிந்த்து. தொடர்ந்து ஆடிய மும்பை அணி ரோஹித் சர்மா 60 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 85 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 18.3 ஓவர்களில் 161/2 என்று அபார வெற்றி பெற்றது.

புனே அணி பேட்டிங் செய்த போது அஜிங்கிய ரஹானே 4 ரன்களில் மெக்லினாகன் பந்தில் வெளியேற, ஸ்டீவ் ஸ்மித், சவுரவ் திவாரி இணைந்தனர். இருவரும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை விளாசி, 2-வது விக்கெட்டுக்காக 44 பந்துகளில் 84 ரன்களைச் சேர்த்தனர். 9.2 ஓவர்களில் 92 என்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால் கேட்ச்கள் சரியாக கணிக்கப்படாமல் மிஸ்பீல்டுகள் என்று மும்பை அணி புனே அணிக்கு உதவி புரிந்தது. ஸ்டீவ் ஸ்மித் 1 ரன்னில் இருந்த போது பார்த்திவ் படேல் ஒரு கடினமான வாய்ப்பைக் கோட்டை விட்டார். இதனையடுத்து ஊக்கம் பெற்ற ஸ்மித், சவுத்தியை 3 பவுண்டரிகள் விளாசினார்.

சதம் அடித்த தன்னம்பிக்கையினால் அவரது பேட்டிங்கில் மெருகு கூடியிருந்தது, இதனால் ஆன் திசையிலும் ஆஃப் திசையிலும் அவர் சிறப்பாக ஆடி 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 6-வது ஓவரில் புனே 50 ரன்களை எடுத்தது.

சவுரவ் திவாரிக்கு அவர் 4 ரன்களில் இருந்த போது மிட் ஆனில் பும்ரா எளிதான கேட்சைக் கோட்டை விட்டார். இதனால் 11 பந்துகளில் 6 என்று திணறிய அவர் திடீரென அதிரடி காட்டி 22 பந்துகளில் 34 ரன்கள் என்று ரன் எண்ணிக்கையில் உயர்ந்தார். 45 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து திவாரி ஆட்டமிழந்தார், 2013-க்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் எடுக்கும் முதல் அரைசதமாகும் இது. குருணல் பாண்டியாவின் 2 வது ஓவரில் திவாரி 2 சிக்சர்கள், 1 பவுண்டரி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

9 ஓவர்களில் 91 என்று இருந்த போது பும்ராவை ரோஹித் சர்மா அழைத்தது திருப்பு முனையை ஏற்படுத்தியது, 23 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 45 எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த ஸ்மித், பும்ராவின் பந்தை தேர்ட் மேனில் தட்டி விடும் முயற்சியில் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த இடத்திலிருந்து தோனி ஆடியது நிச்சயம் அவர் இன்னும் ஆடப்போகும் சில காலங்கள் இந்திய அணியை பாடுபடுத்துவார் என்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. 13-வது ஓவரில் இறங்கி 24 பந்துகளை மட்டுமே சந்தித்து 24 ரன்களையே அவர் எடுத்தார். இதில் அவர் 2 பவுண்டரிகள். பிரச்சினை என்னவெனில். இவர் இறங்கிய பிறகு மீதமிருந்த 42 பந்துகளில் பெரும்பாலான பந்துகளைத் தானே ஆடி, பவுண்டரிகளை விளாச வேண்டியவர், ஒரு ரன்னைத் தட்டி விட்டு எப்போது எதிர்முனைக்குச் செல்லலாம் என்ற கவனத்திலேயே இருந்தார்,

இது நிச்சயம் நல்ல அறிகுறியல்ல. டேவிட் மில்லரைத் தூக்கி விட்டு விஜய்யை கேட்பனாக்கியது போல் தோனி ஓரிரு போட்டிகள் உட்கார்ந்து கொண்டு ஸ்மித்திடம் கேப்டன்சியைக் கொடுத்துப் பார்க்கலாம்.

ஹர்பஜன் சிங்கையே அடிக்க முடியவில்லை. 4 ஓவர்களில் அவர் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். பும்ரா, தனது யார்க்கர்கள், கட்டர்களினால் மேலும் நெருக்க, மெக்லினாகனை எங்கிருந்து ஆடுவது? கடைசி 11 ஓவர்களில் 3 பவுண்டரி 1 சிக்சர்தான் புனே அணிக்கு வந்தது. கடைசி 10 ஓவர்களில் 66 ரன்கள்தான் வந்தது, இதனையடுத்து 159 ரன்களையே எடுத்தது.

ரோஹித் திட்டமிட்ட அதிரடி:

பேட் செய்ய களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா தனது ஆட்டத்தில் தெளிவாக இருந்தார். ஆனாலும் 2 எட்ஜ் பவுண்டரிகள் வந்தது, லெந்த் பந்துகளை விரட்டினார். பார்த்திவ் படேல், டிண்டாவை 3 பவுண்டரிகள் விளாசி 4வது பந்தில் எட்ஜ் செய்தார். ஆனால் அதற்குள்ளேயே ஸ்கோர் 4 ஓவர்களில் 39 ரன்களை எட்டிவிட்டது. அம்பாத்தி ராயுடு ஒன்று, இரண்டு என்று எடுத்து 8-வது ஓவர் அஸ்வின் வந்தவுடன் லாங் ஆனில் ஒரு பெரிய சிக்சரை அடித்தார். ரோஹித் சர்மாவுக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்கப்படவில்லை. மிட்விக்கெட், லாங் ஆன் இடையே ரன்களை அடித்துக் கொண்டேயிருந்தார்.

ரொஹித் சர்மா 38 பந்துகளில் அரைசதம் கண்டார், ராயுடு அவுட் ஆன பிறகு 8 ஓவர்களில் 67 ரன்கள் தேவைப்பட்டாலும் பட்லர், ரோஹித் சர்மா எளிதில் முடித்து வைத்தனர். 8 போட்டிகளில் 6-வது உதையை வாங்கியது தோனியின் அணி.

ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x