Published : 19 May 2022 11:31 PM
Last Updated : 19 May 2022 11:31 PM
மும்பை: ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் லீக் சுற்று போட்டிகளில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று 67வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, களமிறங்கியது. வழக்கம் போல சுப்மன் கில் 1 ரன்னில் நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து மேத்யூ வேட் வந்த வேகத்தில் 16 ரன்களுக்கு அவுட் ஆனார். சிறிது நேரத்தில் விரித்திமான் சஹா 31 ரன்களுக்கு அவசரப்பட்டு ரன் அவுட் ஆக, முதல் வரிசை வீரர்களை இழந்து தடுமாறிய குஜராத் அணிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் மில்லர் இணைந்து நம்பிக்கை அளித்தனர்.
அவர்கள் மூலம் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழந்து 168 ரன்கள் சேர்ந்தது. ஹர்திக் பாண்டியா 62 ரன்களும், மில்லர் 34 ரன்களும் சேர்ந்தனர். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 2 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு இன்றைய போட்டி சர்ப்ரைஸாக அமைந்தது. ஆம், ஓப்பனிங் ஜோடிகள் விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். 15 ஓவர்கள் வரை இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினர். முதல் விக்கெட்டாக டு பிளசிஸ் 15வது ஓவரில் 44 ரன்களுக்கு அவுட் ஆனார். அப்போது அணி 115 ரன்கள் சேர்ந்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பார்முக்கு திரும்பிய விராட் கோலி இந்த ஆட்டத்தில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆகும் போது அணி 146 ரன்கள் சேர்த்திருந்தது.
அடுத்து வந்த மேக்ஸ்வெல் எளிதாக அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டுச் சென்றார். இதனால், 18.4 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி வெற்றிபெற்றது பெங்களூரு அணி. குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பெங்களூரு இன்றைய வெற்றியின் மூலம் 8 ஆட்டங்களில் வெற்றிபெற்று, புள்ளி பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளது.
மும்பை டெல்லி அணிகள் இடையிலான போட்டியின் வெற்றியை பொறுத்து பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அமையும். மும்பையுடனான ஆட்டத்தில் டெல்லி அணி தோற்கும் பட்சத்தில் பெங்களூரு எளிதாக பிளே ஆப் வாய்ப்பை பெறும். ஒருவேளை வெற்றிபெற்றால் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு பின்தங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT