Published : 19 May 2022 07:25 PM
Last Updated : 19 May 2022 07:25 PM
மும்பை: 15-வது ஐபிஎல் சீசனின் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் பங்கேற்கின்றனர்.
வரும் 29-ஆம் தேதி அன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 70 லீக் போட்டிகள் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில போட்டிகள் தான் லீக் சுற்றில் எஞ்சியுள்ளன.
ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் வரும் ஞாயிறு அன்று விளையாடும் போட்டிதான் கடைசி லீக் போட்டி. பிளே-ஆஃப் சுற்றில் முதல் இரண்டு போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி மற்றும் குவாலிபையர் 2 மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதில் இறுதிப் போட்டியை முன்னிட்டு நடைபெறும் நிறைவு விழா காரணமாக ஆட்டம் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் 15-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விழா நடத்தப்பட உள்ளதாம். இதில் இந்திய கிரிக்கெட்டின் பயணம் குறித்த சிறப்புக் காட்சி பெரிய திரையில் காட்சிப்படுத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு முன்னதாக 45 நிமிடங்கள் நிறைவு விழா நடத்தப்பட உள்ளதாம். அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 07:30 மணி அளவில் டாஸ் வீசப்படும் என்றும், 08:00 மணிக்கு ஆட்டம் தொடங்கும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT