Published : 11 Jun 2014 12:02 PM
Last Updated : 11 Jun 2014 12:02 PM

கோப்பையை வென்ற 7-வது நாடு

16-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1998-ம் ஆண்டு ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை பிரான்ஸில் நடைபெற்றது. அங்குள்ள 10 நகரங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல்முறையாக 32 அணிகள் பங்கேற்றன.

1994 வரை 24 அணிகளே உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற நிலையில், பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கூடுதலாக 8 அணிகள் அனுமதிக்கப்பட்டன.

32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 64 போட்டிகள் நடத்தப்பட்டன. உலகக் கோப்பையின் தொடக்க போட்டியும், இறுதிப் போட்டியும் செயின்ட் டெனிஸில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸில் நடைபெற்றன.

அரையிறுதியில் பிரேசில் அணி நெதர்லாந்தையும், பிரான்ஸ் அணி குரேஷியாவையும் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இறுதியாட்டத்தைப் பொறுத்தவரையில் பிரான்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த ஜிடேன், முதல் பாதி ஆட்டத்தின் இஞ்சுரி நேரத்தில் (45+1) மற்றொரு கோலை அடிக்க, பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் இஞ்சுரி நேரத்தில் (90+3) பிரான்ஸின் பெடிட் கோலடிக்க, அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்து உலக சாம்பியன் ஆனது. முதல்முறையாக சாம்பியன் ஆன பிரான்ஸ், உலகக் கோப்பையை வென்ற 7-வது நாடு என்ற பெருமையைப் பெற்றது. இதுதவிர சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற 6-வது நாடு என்ற பெருமையையும் பெற்றது.

முன்னதாக உருகுவே, இத்தாலி, இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, அர்ஜென்டீனா ஆகிய அணிகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றிருந்தன. சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது பிரேசிலின் ரொனால்டோவுக்கும், அதிக கோலடித்த வீரருக்கான கோல்டன் ஷூ விருது குரேஷியாவின் டேவர் சூகருக்கும் கிடைத்தன.



1998 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்

மொத்த ஆட்டம் - 64

மொத்த கோல் - 171

ஒன் கோல் - 4

மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 2,785,100

கோலின்றி முடிந்த ஆட்டம் - 4

டிராவில் முடிந்த ஆட்டம் - 19



டாப் ஸ்கோர்

டேவர் சூகர் (குரேஷியா) - 6 கோல்

கேபிரியேல் பட்டிஸ்டா (அர்ஜென்டீனா) - 5 கோல்

கிறிஸ்டியான் வியெரி (இத்தாலி) - 5 கோல்

ரெட் கார்டு - 22

யெல்லோ கார்டு - 258

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x