Published : 18 May 2022 04:57 PM
Last Updated : 18 May 2022 04:57 PM

மணிப்பூர் | வாழ்வாதாரத்திற்காக மீன் விற்கும் சர்வதேச குங்ஃபூ வீராங்கனை; அரசு உதவிட கோரிக்கை

இம்பால்: வாழ்வாதரத்திற்காக மீன் விற்பனை செய்து வரும் பணியை கவனித்து வருகிறார், மணிப்பூரைச் சர்வதேச குங்ஃபூ வீராங்கனை ஒருவர். தனக்கு உதவி செய்யுமாறு அரசாங்கத்திடம் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார் அவர்.

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் 36 வயதான அங்கோம் பினா தேவி (Angom Bina Devi). குங்ஃபூ வீராங்கனையான அவர் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எண்ணற்ற பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2009-இல் அவரது கணவரின் மறைவுக்கு பிறகு குங்ஃபூ பயிற்சியை தொடங்கியுள்ளார் தேவி. மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர் தனது தாய் வீட்டாருக்கு ஒத்தாசையாக மீன் விற்பனை செய்யும் பணியையும் கவனிக்க ஆரம்பித்தார்.

அதே நேரத்தில் குங்ஃபூ கலையில் மிகவும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதன் பலனாக 2018-இல் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய Wushu சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, மூன்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தேசிய அளவிலும் பதக்கம் வென்றுள்ளார். குங்ஃபூ கலை மட்டுமல்லாது மாற்று முறை மல்யுத்த விளையாட்டிலும் அவர் கைதேர்ந்தவராம்.

"நான் வழக்கமான உணவுகளை தான் எடுத்து வருகிறேன். விளையாட்டில் ஈடுபட்டு வருவதால் சிறப்பு டயட் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை. குடும்பச் சூழல் மற்றும் பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக வீட்டில் உள்ளவர்களுடன் இணைந்து மீன் விற்பனை செய்து வருகிறேன்.

எனது விருப்பத்திற்காக விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன். மீன் விற்பனையில் பெரிய அளவிலான வருமானம் எதுவும் கிடைப்பதில்லை. அரசு எனக்கு நிதியுதவி வழங்கினால் நான் விளையாட்டில் புது தெம்புடன் விளையாடுவேன். இப்போது எனது சொந்த செலவில் தான் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். மணிப்பூருக்கு புகழ் தேடி கொடுப்பது தான் எனது லட்சியம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x