Published : 29 Jun 2014 12:24 PM
Last Updated : 29 Jun 2014 12:24 PM
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் சிலி அணியை பிரேசில் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
முதல் முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1- 1 என்று சமநிலை எய்த, கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் மாறி மாறி கோல் வரை வந்து கோலாக மாற்ற முடியாமல் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.
'கால்பந்தாட்டத்தின் காவியம்' என்றே இந்தப் போட்டியை வரலாற்றில் வர்ணிப்பார்கள். ஒரு வினாடி கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாத இரு அணிகளின் தாக்குதல் ஆட்டம். சிலி அணியின் கோல் கீப்பர் பிராவோவும் பிரேசில் வீரர் சீசருக்கும் போட்டாபோட்டி. களத்தில் ஹல்க், நெய்மார், ஜோ, லூயிஸ், சில்வா, சிலி அணியில் அலெகிசிஸ் சான்சேஸ் உள்ளிட்டவர்களின் அபார தடுப்பு மட்டும் எதிர்த்தாக்குதல் ஆட்டம் இருதயத் துடிப்பை அதிகரித்திருக்கும்.
முதலில் பெனால்டி ஷூட் அவுட்டில் என்ன நடந்தது என்று பார்ப்போம்:
முதலில் பிரேசில் வீரர் டேவிட் லூயிஸ், சிலி கோல் கீப்பர் வலது புறம் டைவ் அடிக்க டேவிட் லூயிஸ் பந்தை இடது புறம் கோலுக்குள் செலுத்தினார் 1-0 பிரேசில்.
அடுத்ததாக சிலி வீரர்: மாரிகோ பினிலா, இவர்தான் பெனால்டிக்கு முந்தைய ஆட்டத்தில் கடைசியாக ஒரு ஷாட்டை பிரேசில் கோல் மேல் பாரில் அடித்தார். இந்த முறை ஈடு கட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாதத்தைப் பக்கவாட்டாகத் திருப்பி நேராக அடிக்க பிரேசில் சீசர் அபாரமாகத் தடுத்து விட்டார்.
பிரேசில் வீரர் வில்லியன்: அடுத்ததாக வில்லியன் வந்தார், பதட்டம் அவர் பந்தை அடிக்க ஓடி வந்தபோதே தெரிந்தது. கோல் கீப்பர் பிராவோ தவறாக டைவ் அடித்தாலும் வில்லியன் இடது புறம் கோலுக்கு வெளியே அடித்துக் கோட்டை விட்டார். பிரேசில் 1- 0.
சிலி வீரர் அலெகிசிஸ் சான்சேஸ் அதிர்ச்சி: சிலியின் ஒரே கோலை நிகழ் நேர ஆட்டத்தில் அடித்தவர் இவரே. மேலும் நேற்றைய ஆட்டத்தில் சிலி அணியின் புலியாகச் சீறிப்பாய்ந்தார். இவர் பெனால்டி ஷாட்டை அடிக்க நல்ல ஷாட்தான். ஆனால் ஆக்ரோஷ சீசர் தடுத்து விட்டார். பிரேசில் 1- 0.
மார்செலோ அபாரமான கோல்: பிரேசிலின் மார்செலோ வந்தார் பதட்டமில்லாமல் கோலுக்குள் அடித்தார். பிரேசில் 2- 0
சிலியின் முதல் பெனால்டி கோல்: சார்ல்ஸ் அராங்குயிஸ் எந்த விதப் பதட்டமும் இல்லாமல் தூக்கி அடித்துக் கோலுக்குள் செலுத்தினார். 5,6 கோல்கீப்பர்கள் கூட அதனைத் தடுக்க முடியாது. சிலி 1 பிரேசில் 2.
பிரேசில் ஹுல்க் அதிர்ச்சி மிஸ்: அடுத்ததாக பிரேசில் வீரர் ஹுல்க் வந்தார், அடித்தார் சிலியின் பிராவோ சரியாகக் கணித்தார் கோல் இல்லை. பிரேசில் 2- 1
அடுத்ததாக சிலி வீரர் மார்செலோ டயஸ் வந்தார் இவரும் நேராகவே அடித்தார் ஆனால் இந்த முறை ஜூலியோ சீசர் மறுபுறம் டைவ் அடித்தார். கோல். 2- 2 என்று சமன்.
பதட்டமும் இருதயத் துடிப்பும் இரு தரப்பினரிடத்திலும் அதிகரிக்க பிரேசில் வீரர் நெய்மார் வந்தார் கொஞ்சம் தடுமாறி ஓடி வந்தார். அவர் பந்தில் காலைக் கொண்டு வரும் முன்பே சிலி கோலி பிராவோ வேறொரு பக்கம் டைவ் அடித்து விட்டார் நெய்மார் கோல். 3- 2.
சிலி வீரர் கொன்சாலோ ஜாரா வந்தார், அருமையாக ஒரு ஷாட்டைத் தூக்கி அடித்தார் சீசர் சரியாகக் கணித்து எம்பினார் பந்து விரலில் பட்டு மேல் போஸ்டைத் தாக்கி வெளியே விழுந்தது. 3- 2 என்று பிரேசில் வெற்றி பெற்றது. பிரேசில் ரசிகர்கள் பித்த நிலையில் உச்சத்திற்குச் செல்ல பிரேசில் வீரர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காலிறுதி நுழைவைக் கொண்டாடினர்.
பரபரப்பான முதல் 90 நிமிட மற்றும் கூடுதல் நேர ஆட்டம்:
ஹை வோல்டேஜ் ஆட்டத்திற்கான விசில் ஊதப்பட்டு 2ஆம் நிமிடத்தில் சிலி அணிக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. அடிக்கப்பட்ட ஷாட் சுலபமாக பிரேசிலினால் வெளியேற்றப்பட்டது.
6-வது நிமிடத்தில் பிரேசிலுக்கு இடது புறம் கார்னர் வாய்ப்பு ஹுல்க் அடிக்க மார்செலோ அதனை வாங்கினார்.அவர் வந்த பந்தை இடது காலுக்கு மாற்றிக்கொண்டு அடிக்க ஷாட் கோலை விட்டு விலகிச் சென்றது.
11-வது நிமிடத்தில் சிலி வீரர் அலெக்சிஸ் சான்சேஸ் வலது புறத்தில் எட்வர்டோவுக்கு அடிக்க அவரால் பந்தை வாங்க முடியவில்லை கீழே விழுந்தார். பெனால்டி கேட்டனர். ஆனால் நடுவர் வெப் அதைக் காதில் போட்டுக்கொள்ளக் கூட இல்லை.
15வது நிமிடத்தில் ஒரு உண்மையான வாய்ப்பு வந்தது சிலி பெனால்டி பகுதிக்கு 6 அங்குலம் வெளியே அபாய ஃப்ரீகிக் கிடைத்தது பிரேசில் அணிக்கு. நெய்மார் அடித்தார் பந்து சுற்றியபடியே கோல் நோக்கி எகிற பிராவோ எம்பிப் பிடித்தார்.
17-வது நிமிடத்தில் சிலி வீரர் யூஜினோ மெனோ வலது புறத்தில் தவறு செய்தார். அதற்காக அவருக்கு கார்டு காண்பிக்கபப்ட்டது. அடுத்த போட்டியில் அவர் ஆட முடியாது. ஃப்ரீ கிக். பிரேசில் வீரர் ஹுல்க் அடிக்க கோல் கீப்பர் பிராவோ வெளியே தள்ளியதால் கார்னர்.
ஒருவிதத்தில் சிலி வீரரின் ஓன் கோல்- ஆனால் டேவிட் லூயிஸ் கணக்கில் சேர்க்கப்பட்டது:
17வது நிமிட ஃப்ரீ கிக்கை பிராவோ வெளியே தள்ளியதால் ஏற்பட்ட கார்னர் வாய்ப்பை நெய்மார் அடித்தார். பெனால்டி பக்குதியில் டேவிட் லூயிஸ நெருங்கி சிலி வீரர் கொன்சாலோ ஜாரா நின்று கொண்டிருந்தார். நெய்மார் அடித்த ஷாட்டை பிரேசிலின் தியாகோ சில்வா ஃபிளிக் செய்ய டேவிட் லூயிஸ் அதனை கோலாக மாற்றினார். ஆனால் அதில் சிலி வீரர் கொன்சாலோ ஜராவின் பங்கும் இருந்தது. ஒரு விதத்தில் இந்த கோல் சிலியின் ஓன் கோல் என்றே கூறப்படவேண்டும். ஆனால் டேவிட் கொன்சாலோ கணக்கில் ஏற பிரேசில் 1-0 என்று முன்னிலை பெற்றது.
இந்த கோலுக்குப் பிறகு சிலி வீரர்களிடத்தில் பெரும்பாலும் பந்து இருந்தது. அவர்கள் பொறுமையைக் கடைபிடித்தனர். பிரேசில் அசறும் போது கோல் அடிக்கலாம் என்று காத்திருந்தனர்.
பிரேசில் வீரர் ஹுல்க் செய்த தவறினால் சிலி சமன்:
ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் உண்மையில் பிரேசில் அணிக்குத்தான் த்ரோ செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. வலது புறத்தில் பிரேசில் கோல் பகுதியில் மார்செலோ அருகில் நின்று கொண்டிருந்த ஹல்க்கிற்கு பந்தை த்ரோ செய்ய அதனை அவர் மீண்டும் மார்செலோவுக்கே அடிக்கத் தப்புக் கணக்குப் போட கோல் அருகில் பந்தைக் கோட்டை விட்டார். இதனை பயன்படுத்திய சிலி வீரர் எட்வர்டோ வார்காஸ் அதனை எடுத்து வந்து அலெக்சிஸ் சான்சேஸிடம் அடிக்க அவர் அதனை ஓரிரு போக்குக் காட்டி கோலாக மாற்றினார். சிலி ரசிகர்கள் எழுச்சியுற்றனர். ஆட்டம் 1- 1 சமன் ஆனது.
அதன் பிறகு பிரேசில் ஆட்டத்தில் ஆக்ரோஷம் கூடியது. சிலியும் விடவில்லை. 45+3 வது நிமிடத்தில் அடுத்தத்து சிலி அணிக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. இரண்டையும் பயன்படுத்தவில்லை.
நெய்மார் சிலி பாதுகாப்பு அரணுக்கு பெரும் தொல்லையாக இருந்தார். அவரது இடது கால் மட்டும் சரியாக இருந்திருந்தால் ஒன்றிரண்டு கோல்களை அடித்திருப்பார்.
இடைவேளைக்குப் பிறகு ....
பிரேசிலுக்கு (சரியாக) மறுக்கப்பட்ட கோல்:
ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் பல வீரர்களைக் கடந்த ஒரு லாங் பாஸ், பிரேசிலின் ஹுல்க்கிடம் வர அவர் அபாரமாக அதனை நெஞ்சினால் கட்டுப்படுத்தி காலுக்குக் கொண்டு வந்து கோலுக்குள் அடிக்க ரசிகர்கள் பைத்தியமானார்கள். ஆனால் நடுவரான இரும்பு உறுதி கொண்ட வெப் இதனை கோல் என்று அனுமதிக்கவில்லை. காரணம் பந்தை நெஞ்சில் வாங்கும் படலத்தில் ஹுல்க் கையில் பந்து பட்டதை கவனித்து விட்டார். கோல் இல்லை என்றதோடு, ஹேண்ட் பாலிற்காக அவர் புக் செய்யப்பட்டார், இது கொஞ்சம் கூடுதல்தான்!
அதன் பிறகு 20நிமிடம் ஆட்டம் சாதரணமாகப் போய்க்கொண்டிருந்தது. 80வது நிமிடத்திலிருந்து ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. காரணம் பிரேசிலின் புதிய உத்தி. ஃபுல் பேக் வீரர்கள் வலதிலும் இடதிலும் தாக்குதல் ஆட்டம் காண்பிக்க நடுக்கள வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் புதிய உத்தி சிலி வீரர்களுக்கும் வாய்ப்பை அளித்தாலும் பெரும்பாலும் பயனடைந்தது பிரேசில் அணியே.
முதலில் 81வது நிமிடத்தில் டேனி அல்வேஸ் அபாரமான ஒரு தூக்கி அடிக்கப்பட்ட பாஸைச் செய்ய நெய்மார் அதனை அற்புதமாக தலையால் அடித்தார் ஆனால் கோல் வாசலில் பந்து பிடிக்கப்பட்டது. பிராவோ ஆபாரம்!
83வது நிமிடத்தில் மீண்டுமொரு ஆக்ரோஷமான மூவில் பந்து ஹுல்க்கிடம் வர அவர் 25 யார்டிலிருந்து சக்தி வாய்ந்த ஷாட்டை கோலை நோக்கி அடித்தார். அபாரமாக தடுக்கப்பட்டது. ஆட்டம் 1- 1 என்ற நிலையில் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.
கூடுதல் நேரத்தின் ஹாஃப்டைத்திலும் கோல் சம நிலையிலேயே இருந்தது. டேனி அல்வேஸுக்கு மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டதை தவிர வேறு ஒன்றும் நடந்து விடவில்லை.
120வது நிமிடத்தில்தான் சிலி அந்த அருமையான வெற்றி கோல் வாய்ப்பைத் தவற விட்டது. தியாகோ சில்வாவின் கண்ணில் மண்ணைத் தூவி பந்தை சிலி வீரர் பினிலா பந்தை எடுத்துக் கொண்டு வந்து வலது புறத்திலிருந்து பெனால்டி பகுதிக்குள் சென்று அபாரமாக ஒரு ஷாட்டை அடிக்க அது அனேகமாக கோல் என்று பிரேசில் லப் டப் அதிகரிக்க பந்து மேல் பாரில் பட்டு வெளியே விலகியது. இதுதான் இந்த லப்-டப் ஆட்டத்தின் கடைசி வாய்ப்பு. அதன் பிறகு ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. பெனால்டி ஷூட் அவுட்டில் என்ன நடந்தது என்பதற்கு கட்டுரையின் மேல் பகுதிக்குச் செல்லவும்.
ஆட்டத்தின் நுணுக்க விவரங்கள்:
பந்தை அதிகம் வைத்திருந்ததில் பிரேசில் 47% சிலி 53%
கோல் முயற்சி பிரேசில் 19; சிலி 10
கோல் இலக்கு நோக்கி துல்லிய ஷாட் வகையில் பிரேசில் 7 முறை சிலி 4 முறை
கார்னர் வாய்ப்புகள்: பிரேசிலுக்கு 9 சிலியிற்கு 5
ஃபவுல்கள்: பிரேசில் 24; சிலி 18.
ஆஃப் சைடு: இரு அணிகளும் தலா 1
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT