Published : 17 May 2022 05:35 PM
Last Updated : 17 May 2022 05:35 PM
மும்பை: தங்கள் அணியின் முன்னாள் வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் என இருவருக்கும் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரம் கொடுத்து கவுரவித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
ஐபிஎல் களத்தில் 15 சீசன்களாக துடிப்பாக இயங்கி வருகிறது ஆர்சிபி. சில சீசன்களில் கோப்பையை வெல்லும் வாய்ப்புக்கு மிக அருகே சென்று அதை மிஸ் செய்துள்ளது. இருந்தாலும் அந்த அணியின் வீரர்களும், நிர்வாகமும், ரசிகர்களும் கோப்பை வெல்லும் கனவையும், அதற்கான துடிப்பை துளியளவும் குறைக்கவில்லை. நடப்பு சீசனில் புதிய கேப்டன் டூப்ளசி தலைமையில் அசத்தி வருகிறது ஆர்சிபி.
அந்த அணியில் இத்தனை சீசன்களாக எத்தனையோ வீரர்கள் வந்தார்கள், சென்றார்கள். ஆனால் ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் வீரர்கள் என்றால் வெகு சிலரை மட்டுமே சொல்ல முடியும். இவர்கள் இல்லாமல் ஆர்சிபி இல்லை என்பதுதான் நிதர்சனம். அந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் நிச்சயம் இருப்பார்கள். இப்போது அவர்களுக்கு தான் 'ஹால் ஆஃப் ஃபேம்' அங்கீகாரம் கொடுத்து கவுரவித்துள்ளது ஆர்சிபி.
15-வது சீசனை கொண்டாடும் விதமாக இதனை ஆர்சிபி முன்னெடுத்துள்ளது. அவர்கள் இருவரும் தான் ஆர்சிபி அணியின் 'ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள முதலிரண்டு வீரர்கள். அதற்கான பதக்கத்தையும் அவர்களுக்கு வழங்குகிறது ஆர்சிபி. இந்த அறிவிப்பு தொடர்பான நிகழ்வில் அவர்கள் இருவரும் இணைய வழியில் அணியுடன் பங்கேற்றனர்.
2011 முதல் 2017 வரையில் ஆர்சிபி அணியில் பிரதான வீரராக விளையாடியவர் கிறிஸ் கெயில். பெங்களூரு அணிக்காக மொத்தம் 84 இன்னிங்ஸ் விளையாடி, 3163 ரன்கள் எடுத்துள்ளார் அவர். ஐபிஎல் அரங்கில் அவரது அதிகபட்சமாக இருக்கும் 175 (நாட்-அவுட்) ரன்களை அவர் ஆர்சிபி அணிக்காக விளையாடிய போது தான் விளாசி இருந்தார். மறுபக்கம் டிவில்லியர்ஸ், 2011 முதல் 2021 வரையில் ஆர்சிபி அணிக்காக விளையாடி உள்ளார். மொத்தம் 144 இன்னிங்ஸ் விளையாடி 4491 ரன்கள் அவர் ஆர்சிபி அணிக்காக எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT