Published : 11 May 2022 09:45 PM
Last Updated : 11 May 2022 09:45 PM
மும்பை: பந்துவீச்சில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இடையே உள்ள வித்தியாசம் இதுதான் என தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும், கொல்கத்தா வீரருமான பேட் கம்மின்ஸ்.
நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார் கம்மின்ஸ். இதில் 5 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடியதன் காரணமாக நடப்பு சீசனில் முதல் சில போட்டிகளை அவர் மிஸ் செய்திருந்தார். மும்பை அணிக்கு எதிராக 15 பந்துகளில் 56 ரன்களை குவித்து அசத்தினார். இந்நிலையில், பந்துவீச்சில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன? என்பதை அவர் விளக்கி உள்ளார்.
"டெஸ்ட் கிரிக்கெட்டும், டி20 கிரிக்கெட்டும் முற்றிலும் மாறுபட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச ஃபிட்னெஸ் ரொம்பவே முக்கியம். ஐந்து நாட்கள் விளையாட வேண்டும் அல்லவா. அங்கு ஒவ்வொரு ஓவரையும் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வீச வேண்டி இருக்கும்.
ஆனால் டி20 கிரிக்கெட் அப்படி இல்லை. இங்கு பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. சில போட்டிகளில் என்ன தான் பவுலர்கள் அற்புதமாக பந்து வீசினாலும், பேட்டில் எட்ஜ் ஆகி பந்து பவுண்டரிக்கு சென்று விடும். அதுதான் டி20 கிரிக்கெட். இங்கு விக்கெட் வீழ்த்துவதை காட்டிலும் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். கடைசி ஓவரை வீசும் பவுலர் 10 அல்லது 12 ரன்கள் கொடுத்தாலே அது சிறந்த ரிசல்டாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் இந்த பார்மெட் பெருவாரியான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நான் கூட பேட்டை சுழற்ற அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் அதுதான்" என தெரிவித்துள்ளார் கம்மின்ஸ். அவர் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT