Published : 11 May 2022 02:55 PM
Last Updated : 11 May 2022 02:55 PM
மும்பை: அதீத உடல் எடை காரணமாக அணியில் விளையாடும் வாய்ப்பு முன்பு தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார் சிஎஸ்கே வீரர் மஹீஷ் தீக்ஷனா. ஆரம்ப நாட்களில் அணியில் இடம் பிடிக்க தான் மேற்கொண்ட போராட்ட கதையை பகிர்ந்துள்ளார் அவர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் 21 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளாரான மஹீஷ் தீக்ஷனா. இலங்கையை சேர்ந்த அவரை 70 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி இருந்தது சிஎஸ்கே. நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது சிஎஸ்கே-வின் ஆஸ்தான ஸ்பின்னராக பின்னி எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றை சிஎஸ்கே அணி நிர்வாகம் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் அவர் சொல்லியுள்ளது இதுதான்.
"அண்டர் 19 போட்டிகள் விளையாடிய காலத்தில் நான் 117 கிலோ எடை இருந்தேன். அதீத உடல் எடை காரணமாக அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. யோ-யோ டெஸ்டில் நான் தேர்ச்சி பெறவில்லை. அதனால் ஆடும் லெவனில் விளையாடும் வீரர்களுக்கு வாட்டர் பாட்டில் கொண்டு சென்று கொடுத்து வரும் பணியை கவனித்தேன்.
பத்து போட்டிகளுக்கு அந்த பணியை செய்தேன். அது 2017-18 சீசனில் நடந்தது. அப்போது ஒரு நாள் நானொரு முடிவுக்கு வந்தேன். அடுத்த முறை யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றாக வேண்டுமென்பதே எனது முடிவு. கடின முயற்சி செய்தேன். அதன் பலனாக இப்போது இங்கு வந்து நிற்கிறேன்.
நான் சென்னை அணியில் விளையாடுவேன் என எண்ணியதில்லை. கடந்த சீசனில் நான் நெட் பவுலராக விளையாடினேன். இந்த முறை என்னை ஏலத்தில் எடுத்துள்ளார்கள்" என தெரிவித்துள்ளார் அவர். நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment