Published : 10 May 2022 03:35 PM
Last Updated : 10 May 2022 03:35 PM
மும்பை: இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள யுவ மோர்ச்சா கூட்டத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பங்கேற்கிறார் என தெரிவித்திருந்தார் அம்மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர். அதற்கு இல்லை என பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.
பாஜக இளைஞர் அணி சார்பில் வரும் 12 முதல் 15-ஆம் தேதி வரையில் மூன்று நாட்களுக்கு இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் யுவ மோர்ச்சா கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேசிய மற்றும் மாநில அளவிலான பாஜக உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது பாஜக அங்கு ஆட்சி செய்து வருகிறது.
பாஜக எம்.எல்.ஏ தெரிவித்தது என்ன? "பாஜக இளைஞர் அணியான யுவ மோர்ச்சாவின் தேசிய செயற்குழு கூட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற உள்ளது. தேசியத் தலைமை மற்றும் மாநிலத் தலைமையின் மேற்பார்வையின் கீழ் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பங்கேற்கிறார். அவரது வெற்றிக்கதை பல இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். அவரது வருகையின் மூலம் முயற்சி இருந்தால் அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் சாதிக்கலாம் என்ற மெசேஜும் இளைஞர்களுக்கு கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார் தர்மசாலா சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினர் விஷால் நஹேரியா.
பிசிசிஐ மறுப்பு: இதனை இந்திய கிரிக்கெட் வாரிய ஊடக மேலாளர் மௌலின் பரிக் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனக்கு டிராவிட் போன் செய்ததாகவும். அந்த செய்தி உண்மையில்லை என தன்னிடம் டிராவிட் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
68 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது இமாச்சலப் பிரதேச மாநிலம். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த மாநிலத்தில் பிரதான கட்சிகளாக உள்ளன. இந்த முறை ஆம் ஆத்மி கட்சியும் தனித்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT