Published : 10 May 2022 02:56 PM
Last Updated : 10 May 2022 02:56 PM
மும்பை: இந்திய அணியின் கேப்டனாக நான் தான் இருந்திருக்க வேண்டும். சேப்பல் தலையீடு காரணமாக தோனி நியமிக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.
இந்திய கிரிக்கெட் அணி 2011 உலகக் கோப்பையை வெல்ல பிரதான காரணமாக அமைந்தவர் யுவராஜ் சிங். ஆல்-ரவுண்டரான அவரது ஆட்டம் இந்தியாவுக்கு பெரிதும் உதவியது. இந்தியாவுக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 402 போட்டிகளில் விளையாடி, 11778 ரன்கள் எடுத்தவர். 21-ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியில் என்ட்ரி கொடுத்தவர். அன்று தொடங்கி சுமார் 17 ஆண்டுகள் நாட்டுக்காக விளையாடி இருந்தார் யுவராஜ்.
"2007 டி20 உலகக் கோப்பையின் போது நான் தான் அணியின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்போதைய பயிற்சியாளர் சேப்பல் விவகாரத்தில் நான் சக அணி வீரருக்கு ஆதரவாக நின்றேன். அது பலருக்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாக அந்த வாய்ப்பு கைகூடாமல் போனது. அப்போது என்னை தவிர யாரை வேண்டுமானாலும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்பது எனது காதுக்கு வந்தது.
அணியின் துணை கேப்டனாக அப்போது நான் இருந்தேன். ஆனால் திடீரென தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இன்று கூட சேப்பல் விவகாரம் மாதிரியான சூழல் வந்தால் சக அணி வீரருக்கு தான் எனது ஆதரவு இருக்கும்" என யுவராஜ் தெரிவித்துள்ளார்.
2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது. அந்த தொடரில் சீனியர் வீரர்கள் பங்கேற்காமல் விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் இந்த தொடரில் தான் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசி இருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT