Published : 09 May 2022 02:53 AM
Last Updated : 09 May 2022 02:53 AM

மாட்ரிட் ஓப்பன் | பட்டம் வென்றார் 19 வயதான கார்லோஸ் அல்கரஸ்

கார்லோஸ் அல்கரஸ்.

மாட்ரிட்: மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார் 19 வயதான இளம் வீரர் கார்லோஸ் அல்கரஸ். இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வீரர் ஆவார்.

கடந்த 2002 முதல் தொழில்முறை ரீதியாக டென்னிஸ் விளையாடி வரும் வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் தொடர் தான் மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் தொடர். களிமண் ஆடுகளத்தில் நடத்தப்படும் தொடர் இது. ஆடவர் மற்றும் மகளிர் என இருபாலரும் இந்த டென்னிஸ் தொடரில் விளையாடி வருகின்றனர். இது ATP டூர் மாஸ்டர்ஸ் 1000 ஈவெண்ட்டில் நடத்தப்படும் ஒரு தொடராகும். இந்த தொடர் கடந்த ஏப்ரல் 28 முதல் மே 8 வரையில் நடைபெற்றது. இதில் பட்டம் வென்று அசத்தியுள்ளார் இளம் வீரர் கார்லோஸ் அல்கரஸ்.

யார் இவர்?

டென்னிஸ் விளையாட்டு உலகின் லேட்டஸ்ட் சென்சேஷனாக இணைந்துள்ளார் கார்லோஸ் அல்கரஸ். ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். கடந்த 2003-இல் பிறந்தவர். நடப்பு மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் தொடரில் இவர் விளையாடினார். இந்த தொடரில் டென்னிஸ் உலகில் தங்களது அபாரமான ஆட்டத்தின் மூலம் ஆட்சி செய்து வரும் ரஃபேல் நடாலை காலிறுதியிலும், ஜோக்கோவிச்சை அரையிறுதியிலும் வீழ்த்தி கவனம் ஈர்த்தார் அவர்.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி உள்ளார். இந்த போட்டியில் நேர் செட் கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளார் கார்லோஸ் அல்கரஸ்.

சர்வதேச ஒற்றையர் ஆடவர் பிரிவு டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசையில் டாப் 4 இடங்களில் இடம்பெற்றுள்ள மூன்று வீரர்களை வரிசையாக அடுத்தடுத்து மூன்று நாட்களில் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மிக இளம் வயதில் இரண்டு மாஸ்டர்ஸ் 1000 பட்டங்களை வென்ற வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார் அவர். கடந்த 2005-இல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மற்றொரு வீரரான ரஃபேல் நடால் 18 வயதில் இரண்டு மாஸ்டர்ஸ் 1000 பட்டங்களை வென்றிருந்தார். இன்று வரை அது தான் சாதனையாக உள்ளது.

"இப்போதைக்கு உலகின் சிறந்த வீரர் கார்லோஸ் அல்கரஸ். அவருக்கு எனது பாராட்டுகள். டென்னிஸ் உலகிற்கு புதிய சூப்பர் ஸ்டார் கிடைத்துள்ளதில் சிறப்பு. அவர் நிறைய கிராண்ட் ஸ்லாம்களை வெல்ல உள்ளார். அவர் உலகின் நம்பர் 1 வீரராக உயர உள்ளார். இந்த தொடரை பல முறை வெல்ல உள்ளார்" என போட்டி முடிந்த பிறகு அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x