Published : 04 May 2022 07:34 PM
Last Updated : 04 May 2022 07:34 PM
புனே: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கை கொஞ்சம் ஓங்கியிருக்கும் என தெரிவித்துள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர்.
தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வந்தவர் இம்ரான் தாஹிர். 43 வயதான அவர் 2018 முதல் 2021 வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நடப்பு சீசனுக்கான 49-வது லீக் போட்டியில் இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. புனேவில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற சூழல்.
"கடந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற காரணத்தால் ஆடும் லெவனில் மாற்றம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என நான் நினைக்கிறேன். ஆல்-ரவுண்டர் பிராவோ ஃபிட்டாக இருந்தால் ஆடும் லெவனில் இருந்து எந்த வெளிநாட்டு வீரரை வெளியில் எடுப்பார்கள் என தெரியவில்லை. நிச்சயம் கான்வே நீக்கப்பட வாய்ப்பில்லை. அவர் தனது இடத்தை தக்கவைப்பார் என நம்புகிறேன்.
இந்தப் போட்டி சென்னைக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். ஏனெனில் இனி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட சென்னை அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் கிடைத்த வெற்றி சென்னைக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கும். அதே நேரத்தில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது பெங்களூரு. அவர்கள் நம்பிக்கையை இழந்திருக்க வாய்ப்புகள் உண்டு. அதனால் சென்னையின் கை இந்தப் போட்டியில் ஓங்கியிருக்கும்" என தெரிவித்துள்ளார் இம்ரான் தாஹிர்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. நடப்பு சீசனில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடிய முதல் லீக் போட்டியில் சென்னை 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT