Published : 16 May 2016 06:15 PM
Last Updated : 16 May 2016 06:15 PM

விராட் கோலியின் ‘மாஸ்டர் கிளாஸ்’ மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்: ஸ்டீவ் ஸ்மித்

சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய கோலியின் அருமையான 82 ரன் இன்னிங்ஸ் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

அன்று விராட் கோலி 39 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார், அதன் பிறகு 12 பந்துகளில் மேலும் 32 ரன்களை விளாசி 5 பந்துகள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார், ஆஸ்திரேலியா வெளியேறியது. இந்த இன்னிங்ஸில் 2 சிக்சர்களையே கோலி அடித்தார்.

இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு ஸ்மித் கூறியதாவது:

அன்று கோலி ஆடிய இன்னிங்ஸை நினைத்துப் பார்க்கும்போது நான் பார்த்ததிலேயே சிறந்த இன்னிங்ஸ் அது என்று கருதுகிறேன். நிச்சயமாக நான் நேரடியாகப் பார்த்த எனக்கு எதிரான ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்றால் அது விராட் கோலி அன்று ஆடியதுதான்.

களத்தின் இடைவெளிகளில் அவர் பந்துகளை செலுத்திய விதம் ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. ஒவ்வொரு முறை அவர் பந்தை அடிக்கும் போதும் அது பவுண்டரிக்குச் செல்லும் என்பது போல் ஆடினார். ஆனால் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கவில்லை.

அது ஒரு ‘கிளாஸ்’ இன்னிங்ஸ். அதுவும் சக்தி வாய்ந்த ஷாட்களே தேவை என்று நினைக்கப்படும் டி20 கிரிக்கெட்டில் இப்படியொரு இன்னிங்ஸ் மிகவும் ஆச்சரியமான ஒன்று.

அந்த ஒரு இன்னிங்ஸை பார்த்த அளவிலேயே நான் நிறைய அவரிடமிருந்து கற்றுக் கொண்டதாக உணர்கிறேன். நம் அணிக்கு அத்தகைய ஒரு இன்னிங்சை ஆட வேண்டும் என்று என்னுள் உத்வேகம் பிறந்தது.

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக நான் ஐபிஎல் தொடரில் அடித்த சதம் அத்தகைய முயற்சியே. கோலி போல்தான் களவியூகத்தின் இடைவெளிகளை சாமர்த்தியமாக பயன்படுத்தி ஆடினேன். அதே வேளையில் நல்ல கிரிக்கெட் ஷாட்களை ஆடினேன்.

இந்தியாவுக்கு எதிராக விராட் கோலி அடித்து நொறுக்கிய போது மிட்செல் ஸ்டார்க் இருந்திருந்தால் ஒருவேளை நமக்கு சாதகமாக மாறியிருக்கலாம், ஆனால் அதுவும் நமக்கு உறுதியாகத் தெரியாததே.

இவ்வாறு கூறினார் ஸ்டீவ் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x