Published : 03 May 2022 03:45 PM
Last Updated : 03 May 2022 03:45 PM

'ஒரு வீரரால் எல்லா நேரமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது' - பாக். பவுலர் ஹசன் அலி

இஸ்லமாபாத்: ஒரு வீரரால் எல்லா நேரமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இதனை அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருபவர் ஹசன் அலி. பவுலரான அவர் மூன்று பார்மெட்டுகளையும் சேர்த்து 223 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2021 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் அவர் கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார். அப்போது முதலே அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹசன் அலி பேசியுள்ளார்.

தற்போது கவுன்டி கிரிக்கெட்டில் லங்காஷயர் அணிக்காக விளையாடுவதற்காக இங்கிலாந்தில் உள்ளார் ஹசன் அலி. அவர் பேசுகையில் "ஒட்டுமொத்தமாக அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் நான் சிறப்பாக விளையாடி உள்ளேன். அறிமுகமான நாள் முதல் தேசிய அணியில் நான் தான் இரண்டாவது சிறந்த பவுலராக உள்ளேன். அப்படி இல்லையெனில் முதலிடம்.

ஒரு வீரரால் எல்லா நேரமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. கடந்த காலங்களில் இது மாதிரியான விமர்சனங்களை பல ஜாம்பவான்கள் எதிர்கொண்டுள்ளனர். என்னிடம் விடாமுயற்சி உள்ளது. அதன் மூலம் எனது குறைகளை நிறைகளாக மாற்றுவேன். அதனால் தான் பாபர் ஆஸம் என்னை ஆதரிக்கிறார்.

டி20 உலகக் கோப்பையில் கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டதற்காக இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்தேன். அரையிறுதியில் தவறவிட்ட அந்த கேட்ச் குறித்து ரசிகர்கள் விமர்சித்ததில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எனது குடும்பத்தினரை குறிவைத்து விமர்சித்தது தவறு" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x