Published : 29 Apr 2022 07:32 PM
Last Updated : 29 Apr 2022 07:32 PM
மும்பை: வறுமையிலிருந்து குடும்பத்தை மீட்பேன் என தனது தாயிடம் சத்தியம் செய்தவர் ரோவ்மேன் பவல். அந்த வாக்கை அவர் காப்பாற்றி வருகிறார் என தெரிவித்துள்ளார் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் இயன் பிஷப்.
நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ரோவ்மேன் பவல். 28 வயதான அவர் ஜமைக்காவை சேர்ந்தவர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அது தவிர உலக அளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறார். டெல்லி அணி அவரை 2.8 கோடி ரூபாய்க்கு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கியிருந்தது. இப்போது அந்த அணியின் பினிஷர் பணியை அவர் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், எளிய பின்புலத்தை சேர்ந்த அவரது வாழ்க்கை கதையை கிரிக்கெட் உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் இயன் பிஷப். ஐபிஎல் கிரிக்கெட் இப்படி எளிய பின்புலம் கொண்ட பலருக்கு வாழ்க்கையில் கை கொடுத்துள்ளது. அப்படி எத்தனையோ வீரர்கள் ஐபிஎல் மூலம் மில்லியனர்களாக அவதரித்துள்ளனர்.
"எளிய பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் ரோவ்மேன் பவல். பள்ளி படித்த போதே வறுமையிலிருந்து குடும்பத்தை மீட்பேன் என தனது தாயிடம் சத்தியம் செய்தவர். இப்போது அவர் கொடுத்த வாக்கை (தங்கள் குடும்பத்தின் நிலையை மாற்ற) காப்பாற்றி வருகிறார். அவர் ஐபிஎல் விளையாடுவது பலருக்கு மகிழ்ச்சியை கொடுக்க காரணமும் இதுதான். எனக்கும் இதில் மகிழ்ச்சி தான். அவரது கதையை யூடியூபில் Rovman Powell’s life story என்பதன் மூலம் அறியலாம். பத்து நிமிடங்கள் போதும்" என தெரிவித்துள்ளார் பிஷப்.
சிங்கிள் மதரான அவரது தாய் தான் ரோவ்மேன் பவலை வளர்த்து ஆளாகியுள்ளார். அவருக்கு தங்கை ஒருவரும் இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT