Published : 23 May 2016 03:05 PM
Last Updated : 23 May 2016 03:05 PM
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை மீண்டும் தனது அபார அரைசதத்துடன் 2-ம் இடத்துக்குக் கொண்டு சென்ற விராட் கோலி, சாத்தியமற்ற நிலையிலிருந்து தங்கள் அணி இந்த அளவுக்கு முன்னேறியுள்ளது குறித்து பெருமை அடைவதாக தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூரில் நடைபெற்ற நேற்றைய கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி, டெல்லியை பேட் செய்ய அழைத்தார் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு கோலியின் 54 நாட் அவுட் இன்னிங்ஸுடன் 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில் டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்த ஜாகீர் கான் வீசிய பந்து அற்புத வகையறாவைச் சேர்ந்தது. 6 ரன்கள் எடுத்திருந்த டிவில்லியர்ஸ் ஆட்டத்தின் 3-வது ஓவரை ஜாகீர் கான் வீச, 3-வது பந்தில் மிகப்பெரிய டிரைவ் ஆட முயன்ற டிவிலியர்ஸ் கூடுதல் பவுன்ஸ் காரணமாக பந்தைத் தொடமுடியவில்லை.
அடுத்த பந்தும் நல்ல அளவில் நல்ல பவுன்ஸுடன் வந்தது. டிவில்லியர்ஸ் ஏற்கெனவே டிரைவ் ஆடும் நிலைக்கு வந்தார், ஆனால் கூடுதல் பவுன்ஸ் மற்றும் கோணத்தினால் அவரால் மட்டையை விலக்கிக் கொள்ள முடியவில்லை. தனது வலது கையை மட்டையிலிருந்து விலக்கிக் கொண்டாலும் பந்து மட்டை விளிம்பில் பட்டு எக்ஸ்ட்ரா கவரில் ஜெயந்த்திடம் கேட்ச் ஆனது. மிக அருமையான பந்து, டெஸ்ட் கிளாஸ் பந்தாகும் அது. இந்நிலையில் 19/2 என்று பெங்களூரு தடுமாறியது, ஆனால் விராட் கோலி இருக்கும் ஃபார்முக்கு 138 ரன்கள் ஒரு போதும் போதாது.
முதல் குவாலிஃபயர் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை சந்திக்கிறது பெங்களூரு. தனது அணி கீழ்நிலையிலிருந்து தகுதி பெற்றது குறித்து விராட் கோலி கூறும்போது, “ஒவ்வொரு ஆட்டமும் புது ஆட்டமே. நாங்கள் சாத்தியமற்ற நிலையில் இருந்தோம், ஆனால் கவனம் எங்களை முன்னேற்றியது.
என்னுடைய குறிக்கோள் அணியை பிளே ஆஃபுக்கு இட்டுச் செல்வதே. நான் புதிதாகத் தொடங்க வேண்டும், நான் கூறுவது அறுவையாகக் கூட இருக்கலாம் ஆனால் அது அப்படித்தான். கட்டுக்கோப்புடன் ஆட வேண்டுமெனில் அறுவையாக ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது.
களத்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவது சாதிக்க வேண்டும், நான் இந்த ஆட்டத்திற்கு வரும் போதே இதைச் செய்யத்தான் நான் பிறந்திருக்கிறேன் என்ற எண்ணத்துடன் தான் நுழைந்தேன்.
ஃபார்மில் இருக்கும் போது, அராஜகமாக இருக்கக் கூடாது என்பதில் என் கவனம் இருந்தது. நம்பிக்கைக்கும், மிகை நம்பிக்கைக்கும் இடையிலான ஒரு மெலிதான கோடு உள்ளது. ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகே ரசிகர்கள் என் மீது நேயத்தை பொழிந்து வருகின்றனர்.
இந்த பிட்ச் 160 ரன்களுக்கான பிட்ச், இதில் டெல்லியை 138 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது பவுலர்களுடைய திறமைக்கு உரித்தானது, அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT