Published : 25 Apr 2022 08:56 PM
Last Updated : 25 Apr 2022 08:56 PM
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பாதி ஐபிஎல் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் 2022 சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கியது லீக் ஆட்டங்கள். 70 லீக் ஆட்டங்களில் 37 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. தொடரில் பங்கேற்று விளையாடி வரும் 10 அணிகளும் குறைந்தபட்சம் 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. புள்ளிப்பட்டியலில் குஜராத், ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளன. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
தொடரின் சிறந்த வீரர்கள் அடங்கிய அணி விவரம்…
ஜாஸ் பட்லர் - ராஜஸ்தான் ராயல்ஸ்
நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக மிளிர்கிறார் ராஜஸ்தான் அணி வீரர் பட்லர். 7 இன்னிங்ஸ் விளையாடி 3 சதம், 2 அரைசதம் பதிவு செய்துள்ளார். மொத்தம் எடுத்துள்ள ரன்கள் 492. இப்போதைக்கு அதிக பவுண்டரி மற்றும் அதிக சிக்சர்கள் பதிவு செய்த வீரராகவும் அவர் உள்ளார். மற்ற பேட்ஸ்மேன்கள் அவரது ரன்களை நெருங்க கூட முடியாத நிலையில் உள்ளனர்.
கே.எல்.ராகுல் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
8 போட்டிகளில் விளையாடி, 368 ரன்களை குவித்துள்ளார் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். 2 சதம் இதில் அடங்கும். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக ராகுல் உள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் ரன் குவிப்பை தொடருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
திலக் வர்மா - மும்பை இந்தியன்ஸ்
19 வயதான இளம் வீரர் திலக் வர்மா நடப்பு சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. மும்பை அணி தோல்வியை தழுவிக் கொண்டிருந்தாலும் இவரது பேட்டிங் அணிக்கு கிடைத்த ஆறுதல்களில் ஒன்று. 8 போட்டிகளில் விளையாடி 272 ரன்களை எடுத்துள்ளார் அவர். அவரது பேட்டிங் சராசரி 45.33.
ஷிவம் துபே - சென்னை சூப்பர் கிங்ஸ்
7 போட்டிகளில் விளையாடி, 239 ரன்களை குவித்துள்ளார் சென்னை வீரர் ஷிவம் துபே. நடப்பு சீசனில் இவரது பேட்டிங் திறன் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 46 பந்துகளில் 95* (நாட்-அவுட்) ரன்கள் எடுத்திருந்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் டீசண்டாக உள்ளது. வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு என இரண்டு விதமான பவுலிங்கையும் சமாளித்து ஆடுகிறார்.
இவர்களை தவிர பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ராகுல் திரிபாதி, ஷ்ரேயஸ் ஐயர் மாதிரியான வீரர்களும் டாப் ஆர்டரில் கவனம் ஈர்த்து வருகின்றனர்.
ஹர்திக் பாண்ட்யா - குஜராத் டைட்டன்ஸ் (கேப்டன்)
நடப்பு சீசனில் அனைவருக்கும் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஹர்திக். குஜராத் அணியின் கேப்டனான அவர் ஆல்-ரவுண்ட் பர்பாமென்ஸை கொடுத்து வருகிறார். ஆறு போட்டிகளில் விளையாடி 295 ரன்கள் சேர்த்துள்ளார். அதோடு 18.3 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். தனது பணியை ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செய்து வருகிறார் ஹர்திக்.
சூர்யகுமார் யாதவ் - மும்பை இந்தியன்ஸ்
ஆறு போட்டிகளில் விளையாடி 239 ரன்களை சேர்த்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இரண்டு அரைசதம் இதில் அடங்கும். இவரது பேட்டிங் சராசரி 47.80 என உள்ளது. நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர் தனது அசத்தலான ஆட்டத்தை தொடர வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் பஞ்சாப் வீரர் லிவிங்ஸ்டன் அசத்தி வருகிறார்.
தினேஷ் கார்த்திக் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
சிறந்த பினிஷராக தனது பணியை செய்து வருகிறார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக். 8 போட்டிகளில் விளையாடி 210 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஆறு முறை இறுதி வரை தனது விக்கெட்டை இழக்காமல் பேட் செய்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 200. பெங்களூரு அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைகிறது இவரது ஆட்டம்.
தோனி, ஹெட்மெயர், ரஸ்ஸல் மாதிரியான வீரர்களும் பினிஷிங் ரோலை சிறப்பாக கவனித்து வருகின்றனர்.
நடராஜன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
துல்லியமாக பந்து வீசி வருகிறார் யார்க்கர் புயல் தங்கராசு நடராஜன். 7 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹைதராபாத் அணியின் வெற்றிக்கும் தேவைப்படும் விக்கெட்டுகளை கைப்பற்றி தருகிறார். தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் மீண்டும் இந்திய அணிக்குள் நடராஜன் கம்-பேக் கொடுக்கலாம்.
சாஹல் - ராஜஸ்தான் ராயல்ஸ்
கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹல் இடம் பெறவில்லை. இருந்தாலும் நடப்பு ஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கராக ஜொலித்து வருகிறார். மொத்தம் 18 விக்கெட்டுகளை 7 ஆட்டங்களில் 28 ஓவர்கள் வீசி கைப்பற்றியுள்ளார். இதில் ஹாட்ரிக்கும் அடங்கும். அவரது விக்கெட்டை வேட்டை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உம்ரான் மாலிக் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தனது அதிவேக பந்து வீச்சினால் பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். சராசரியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் இவர் சுமார் 91 சதவீத பந்துகளை வீசியுள்ளார். 7 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 81 டாட் பால் வீசியுள்ளார்.
பிரசித் கிருஷ்ணா - ராஜஸ்தான் ராயல்ஸ்
பெரிய அளவில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார் பிரசித் கிருஷ்ணா. 28 ஓவர்கள் (168 பந்துகள்) வீசியுள்ளார். அதில் 81 பந்துகள் ரன்கள் ஏதும் கொடுக்கப்படாத டாட் பந்துகளாகும்.
ஆவேஷ் கான், உமேஷ் யாதவ் மாதிரியான பவுலர்களும் கவனம் ஈர்த்து வருகின்றனர். குல்தீப் யாதவ் சுழலில் அசத்தி வருகிறார். அடுத்து நடைபெறவுள்ள எஞ்சிய லீக் ஆட்டங்களில் இவர்களை தவிர இன்னும் பிற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT