Published : 22 Apr 2022 12:20 PM
Last Updated : 22 Apr 2022 12:20 PM
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கேட்ச்களை பிடிக்கத் தவறி இருந்தனர். இதில் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா மட்டும் இரண்டு வாய்ப்புகளை நழுவ விட்டிருந்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட லீக் போட்டிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இந்த போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசி இருந்தது. ஆட்டத்தின் முடிவும் சென்னை அணிக்கு சாதகமாகவே அமைந்தது. தோனியின் அதிரடி பினிஷிங் டச் காரணமாக 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.
இருந்தாலும் இந்தப் போட்டியில் சென்னை அணியின் மந்தமான ஃபீல்டிங் செயல்பாடு அப்பட்டமாக வெளிப்பட்டது. அது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ஜடேஜா, பிராவோ, துபே மாதிரியான சென்னை அணியினர் தங்கள் கைகளுக்கு வந்த பந்தை கேட்ச் பிடிக்க தவறி இருந்தனர்.
உலகத்தின் சிறந்த ஃபீல்டர் என போற்றப்படும் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா, இந்த போட்டியில் இரண்டு கேட்ச்களை நழுவ விட்டிருந்தார். அதே போல தோனி ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை மிஸ் செய்திருந்தார். இதுகுறித்து ஆட்டம் முடிந்ததும் ஜடேஜா பேசியிருந்தார். "எப்போதாவது இப்படி நடக்கும். அதனால் தான் எப்போதுமே நான் ஃபீல்டிங்கில் கடுமையாக பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். நாங்கள் கொஞ்சம் ஃபீல்டிங்கில் கவனம் வைக்க வைக்க வேண்டி உள்ளது. கேட்ச் டிராப் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது" என தெரிவித்தார்.
மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர்கள் கச்சிதமாக கேட்ச்களை பிடித்திருந்தால் மும்பை அணியின் மொத்த ரன்னில் எப்படியும் குறைந்தது 10 ரன்களையாவது குறைத்திருக்கக் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT