Published : 19 Apr 2022 11:32 PM
Last Updated : 19 Apr 2022 11:32 PM
ஐபிஎல் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பெங்களூரு அணியிடம் வீழ்ந்தது.
182 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு இந்த முறை ஓப்பனிங் கைகொடுக்க தவறியது. மூன்றாவது ஓவரிலேயே குயின்டன் டி காக் 3 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். 5வது ஓவரில் மனிஷ் பாண்டே 6 ரன்கள் எடுத்த கையோடு நடையைக்கட்ட, ஓரளவு அடித்து ஆடிய கேப்டன் கேஎல் ராகுலும் 30 ரன்களில் ஹர்ஷல் படேலில் ஸ்லோ பாலில் வீழ்ந்தார். 13 ரன்கள் எடுத்த தீபக் ஹூடாவும் அவுட் ஆக 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட் இழந்து தடுமாறியது லக்னோ.
எனினும், குர்னால் பாண்டியா 42 ரன்கள் எடுத்து கைகொடுக்க, இறுதிக்கட்டத்தில் 12 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் களத்தில் இருந்தனர். ஹேசில்வுட் வீசிய முதல் பந்திலேயே ஸ்டாய்னிஸ் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ஹேசில்வுட் இது நான்காவது விக்கெட் ஆகும்.
இறுதி ஓவரில் 31 ரன்கள் தேவை நின்ற நிலையில் ஹர்சல் படேல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்தார் ஹோல்டர். எனினும் அடுத்த பந்தே அவுட் ஆகி வெளியேற லக்னோ அணி தோல்வியை தழுவியது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.
பெங்களூரு இன்னிங்ஸ்: டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணிக்கு அனுஜ் ராவத், பாப் டூ பிளசிஸ் இணை தொடக்கம் கொடுத்தது. பெங்களூருக்கு இது மோசமான தொடக்கமாகவே அமைந்தது. அனுஜ் ராவத் 4 ரன்களில் வெளியேற, அடுத்த வந்த கோலி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மேக்ஸ்வெல்லும் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காமல் 23 ரன்களில் நடையைக் கட்டினார். சுயாஷ் பிரபுதேசாய் 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பெங்களூரு அணிக்கு பாப் டூ ப்ளஸ்சிஸ் பெரும் பக்கபலமாக திகழ்ந்தார். 61 பந்துகளில் 94 ரன்களை குவித்த அவரை ஜெசன் ஜேசன் ஹோல்டர் வெளியேற்றினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 181 ரன்களை குவித்தது. தினேஷ் கார்த்திக் 13 ரன்களுடனும், ஹர்ஷல் படேல் ரன் எதுவும் எடுக்காமல் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர்.
லக்னோ அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர், துஷ்மன் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், குர்ணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT