Published : 18 Apr 2022 11:58 PM
Last Updated : 18 Apr 2022 11:58 PM
218 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இன்று ஓப்பனிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக சுனில் நரேன், ஆரோன் பின்ச் உடன் தொடக்க வீரராக களம்புகுந்தார். இந்த மாற்றம் கைகொடுக்கவில்லை. ஆட்டத்தின் முதல் பந்திலேயே நரேனை ஹெட்மேயர் ரன் அவுட் மூலமாக வெளியேற கொல்கத்தா அணி அதிர்ச்சியை சந்தித்தது. எனினும், அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ஆரோன் பின்ச் உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். இருவரும் அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டுக்கு அனுப்பினர்.
இதனால் அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் 70 ரன்களை தாண்டி சென்றது. விரைவாக 100 ரன்களையும் சேர்த்தனர். 9வது ஓவரின் கடைசி பந்தில் தான் இந்தக் கூட்டணி பிரிந்தது. 58 ரன்கள் எடுத்த ஆரோன் பின்ச் பிரசித் கிருஷ்ணா பந்தில் அவுட் ஆகி வெளியேறினர்.
அதன்பின்னர் வந்தவர்களில் நிதிஷ் ராணா மட்டுமே 18 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக சஹால் தனது ஓவரில் ஒரு ஹாட்ரிக் விக்கெட் உடன் சேர்த்து அந்த ஒரு ஓவரில் 4 விக்கெட் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். சஹால் மட்டும் மொத்தம் 5 விக்கெட் கைப்பற்றினார். 85 ரன்கள் எடுத்த ஷ்ரேயாஸையும் சஹால் அவுட் ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
இறுதிக்கட்டத்தில் உமேஷ் யாதவ் 6 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் பவுலர்களுக்கு கிலி ஏற்படுத்தினார். இதனால் இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை வீசிய மெக்காய் திறம்பட வீசிய இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு தேவ்தத் படிக்கல், ஜாஸ் பட்லர் இணை துவக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த இணையை பிரிக்க முடியாமல் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.
ஒருவழியாக 9-வது ஓவரில் 18 ரன்கள் எடுத்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த தேவ்தத் படிக்கலை சுனில் நரேன் போல்டாக்கி வெளியேற்றினார். அடுத்தாக களத்துக்கு வந்த சஞ்சு சாம்சன் பட்லருடன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த 15-வது ஓவரில் 1 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி 163 ரன்களை சேர்த்தது. ஒருபுறம் பட்லர் ஆடி 55 பந்துகளில் 90 ரன்களை குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார். கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
18 பந்துகளில் 38 ரன்களை எடுத்திருந்த சஞ்சு சாம்சன் ரஸ்ஸல் பந்தில் விக்கெட்டாகி வெளியேறினார். இதையடுத்து பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் கேட்சாகி அதுவரை அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பட்லர் 61 பந்துகளில் 103 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரியான் பராக் 5 ரன்களில் நடையைக் கட்டினார். கருண் நாயரும் பெரிய அளவில் ரன்கள் எதும் சோபிக்கவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது.
ஹெட்மேயர் 26 ரன்களுடனும், ரவிசந்திரன் அஸ்வின் 2 ரன்களுடனும் களத்தில் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். கொல்கத்தா அணி தரப்பில், சுனில் நரேன் 2 விக்கெட்டுகளையும், ரஸல், பேட் கம்மின்ஸ், ஷிவம் மாவி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT