Published : 18 Apr 2022 07:39 AM
Last Updated : 18 Apr 2022 07:39 AM
புனே: ஐபிஎல் டி 20 தொடரில் டேவிட் மில்லரின் அதிரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. புனேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காரணமாக ஹர்திக் பாண்டியா களமிறங்காததால் குஜராத் அணியை ரஷித் கான் வழிநடத்தினார். முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில், 73 ரன்கள் விளாசினார். அம்பதி ராயுடு 46, ராபின் உத்தப்பா 3, மொயின் அலி 1, ரவீந்திர ஜடேஜா 22, ஷிவம் துபே 19 ரன்கள் சேர்த்தனர்.
170 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் தொடக்கத்தில் ஆட்டம் கண்டது. ரித்திமான் சாஹா 11, ஷுப்மன் கில் 0, விஜய் சங்கர் 0, அபிநவ் மனோகர் 12 ரன்களில் நடையை கட்டினர். 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய டேவிட் மில்லர் மட்டையைச் சுழற்றினார். நிதானமாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய ரஷித் கான் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாசிய நிலையில் பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார்.
ஜோர்டான் வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 3-வது பந்தை சிக்ஸருக்கு விளாசினார் டேவிட் மில்லர். அடுத்த பந்து நோ பாலாக வீசப்பட்டது. இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் மில்லர். அடுத்த பந்தில் 2 ரன்கள் சேர்க்க குஜராத் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் 51 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது.
அதேவேளையில் சென்னை அணி 5-வது தோல்வியைச் சந்தித்தது. ஜோர்டான் வீசிய 18-வது ஓவரில் 25 ரன் விளாசப்பட்டது திருப்புமுனையாக அமைந்தது.
ஹைதராபாத் அசத்தல்...
முன்னதாக மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதரபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. 152 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டம் ராஜஸ்தான் - கொல்கத்தா நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT