Published : 15 Apr 2022 06:47 PM
Last Updated : 15 Apr 2022 06:47 PM
லண்டன்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில் வித்தை முதலான விளையாட்டுகளை நீக்கம் செய்வது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவை இந்திய வீரர் பஜ்ரங் புனியா விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 1930ம் ஆண்டு முதல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த சர்வதேச விளையாட்டு நிகழ்வில் காமன்வெல்த் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடுவர். நடப்பு ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டுகள் கூட்டமைப்பின் முடிவு இந்திய வீரர்களுக்கு இடியாக அமைந்துள்ளது.
அதாவது மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகளை வரும் 2026 காமன்வெல்த் போட்டிகளில் இருந்து நீக்க காமன்வெல்த் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதுதான் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“மல்யுத்தம் உட்பட சில விளையாட்டுகளை வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளிலிருந்து நீக்கும் முடிவு தவறானது. மல்யுத்தம் மிகவும் பழமையான விளையாட்டுகளில் ஒன்று. இது தொடர்பாக நாம் கோரிக்கை மட்டும்தான் வைக்க முடியும். ஆனால் முடிவு, கூட்டமைப்பின் கையில்தான் உள்ளது” என தெரிவித்துள்ளார் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. ஒலிம்பிக்கில் வெண்கலம், காமன்வெல்த்தில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றுள்ளார் புனியா.
கடந்த 1930 முதல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மல்யுத்தம் விளையாடப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சுடுதல் வீரர் ரொஞ்ஜன் சிங் சோதியும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். “இது திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. துப்பாக்கிச் சுடுதல் ஒலிம்பிக்கில் இருக்கும்போது, ஏன் காமன்வெல்த்தில் கூடாது” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா, துப்பாக்கி சுடுதலில் 7 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களை வென்றிருந்தது. மல்யுத்தத்தில் 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment